செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் துவங்கி மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக உடுப்பி, உத்தர கன்னடா, பெலகாவி, கலபுராகி, விஜயபுரா, யாதகிரி, சிவமொகா ஆகிய மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தட்சிண கன்னடா, பாகல்கோட், ராய்ச்சூர், சிக்கமகளுாரு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டமான உடுப்பியில், 30 முதல் 40 கி.மீ வேகத்தில் சுழற்காற்று வீசும் வாய்ப்புள்ளது. விஜயபுரா, கலபுரகி, யாத்கிர், பெலகாவி, ஷிவமொகா மாவட்டங்களில், மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சுழற்காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டத்தில், பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம் என்றும், ராய்ச்சூர், பாகல்கோட், சிக்கமகளுாரில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், தாவணகெரே, சித்ரதுர்கா, பல்லாரியில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களுாரு நகர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், மேகமூட்டமான வானிலை இருக்கும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.