கர்நாடகாவின் மூத்த பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா மீது சில மாதங்களுக்கு முன்பு, பெண் ஒருவர், மோசடி வழக்குத் தொடர்பாக உதவி கேட்க சந்தித்தபோது அவர் தனது 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். 17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனினும் இந்தப் புகாரை எடியூரப்பா மறுத்திருந்தார்.
இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை சிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், புகாரளித்த பெண் சமீபத்தில் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, வழக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எடியூரப்பா மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த வழக்கில் ஏற்கெனவே புகார் கொடுத்து இதுவரை எடியூரப்பா கைது செய்யப்படவில்லை என சிறுமியின் சகோதரர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இதற்கிடையே இந்த வழக்கு தொடா்பாக ஜூன் 12ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு சிஐடி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், எடியூரப்பா, தான் டெல்லியில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்றும், பெங்களூரு திரும்பியதும் ஜூன் 17ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாகவும் சிஐடிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகாத எடியூரப்பாவைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்குமாறு பெங்களூரு, முதலாம் விரைவு நீதிமன்றத்தை சிஐடி அணுகியது.
இதை ஏற்ற நீதிமன்றம், எடியூரப்பாவை கைது செய்வதற்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதனிடையே இந்த வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவாரண்ட்டுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. அதில், ஜூன் 17ஆம் தேதி வரை எடியூரப்பாவை கைது செய்ய தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: இனி, செல்போன் நம்பருக்கும் கட்டணம்.. அரசுக்கு டிராய் பரிந்துரை!