இந்தியாவின் சிலிகான் வேலி (silicon valley) என்ற அழைக்கப்படும் நகரம் பெங்களூரு. பெரும்பாலும், ஐடி துறையில் கோலோச்சும் சர்வதேச நிறுவனங்களின் இந்திய கிளைகள் பெங்களூருவிலேயே அமைந்துள்ளன. இங்கு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐ.டி. துறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில்தான், தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு இயற்றியுள்ளது. அதில், ’கர்நாடகாவில் உள்ள அனைத்துத் தனியார் நிறுவனங்களிலும் நிர்வாகப் பணிகளில் 50 சதவீதமும், நிர்வாகம் சாராத பணிகளில் 75 சதவீதமும் கன்னடர்களை பணியமர்த்த வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின்படி, கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர், 15 ஆண்டுகள் மாநிலத்தில் வசிப்பவர்கள், கன்னடத்தை தெளிவாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்தவர்கள் இடஒதுக்கீடு பெற தகுதியானவர்கள். தகுதியான அல்லது பொருத்தமான உள்ளூர் நபர்கள் கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அரசுடன் இணைந்து உள்ளூர் நபர்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் இந்த மசோதா கூறுகிறது. இந்த மசோதா, நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இதுதொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ’கன்னடர்கள் தங்களது நிலத்தில் வேலைவாய்ப்பு இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம்’ எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு இன்போசிஸ், மணிபால், பயோகான் உள்ளிட்ட பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. இந்த மசோதா பாரபட்சமானது என்றும், அரசியல் சாசனத்தை மீறிய செயல் என்றும் கண்டனங்கள் வலுத்தன.
குறிப்பாக, நாஸ்காம் (nasscom) எனப்படும் தேசிய ஐடி நிறுவனங்களுக்கான சங்கம், ஏற்கெனவே எட்டப்பட்ட வளர்ச்சி தடம்புரளாமல் தடுக்க ஐடி நிறுவனங்களுடன் அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இவ்வாறான கட்டுப்பாடுகள் ஐடி நிறுவனங்களை வேறு மாநிலங்களை நோக்கி நகரச் செய்துவிடும் என்றும் நாஸ்காம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியாங்க் கார்கே, ”இந்த மசோதாவின் விதிமுறைகள் குறித்து தொழில் நிபுணர்கள் மற்றும் பிற துறைகளின் கருத்துகளைக் கேட்டு அதன்பின்னரே அமல்படுத்தப்படும் என முதல்வர் சித்தராமைய்யாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் யாரும் பீதி அடையத் தேவையில்லை, விரிவான ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்துக்கு வரப்படும். மேலும் மாநில அரசின் நோக்கம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதும் அதே நேரத்தில் முதலீடுகளை ஈர்ப்பதும் முக்கியம் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த இட ஒதுக்கீடு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக அமையும் என பிரபல தொழிலதிபர்கள் கிரண் மஜூம்தார், மோகன் தாஸ் பை ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இன்போசிஸ் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரி மோகன்தாஸ் பை, “கன்னடியர்களை வேலை வாய்ப்புக்காக ஊக்குவிக்க விரும்பினால், உயர்கல்விக்கு அதிக பணம் செலவிடுங்கள். அவர்களுக்கு பயிற்சி கொடுங்கள். திறன் மேம்பாட்டிற்கு அதிக பணம் செலவிடுங்கள். இன்டர்ன்ஷிப்பிற்கு அதிக பணம் செலவழிக்கவும். பயிற்சித் திட்டங்களில் பணம் செலவழிக்கப்படுவதில்லை. நீங்கள் என்ன சாதிக்கிறீர்கள்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஆந்திர அமைச்சரும், முதலமைச்சரின் மகனுமான நாரா லோகேஷ், நாஸ்காம் உறுப்பினர்களை வரவேற்க ஆந்திரா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். உலகத் தரமான வசதிகளை செய்து தருவதாகவும் நாரா லோகேஷ் உறுதி அளித்துள்ளார். அதேநேரத்தில், கர்நாடக அரசு கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றினாலும் அமல்படுத்துவது கடினம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்பட்டு, இந்தியர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அவை எதிரானது என நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படி, கர்நாடகாவில் தொழில் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே 100% வேலைவாய்ப்பு தர வேண்டும் என்கிற மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த மசோதாவை நிறுத்திவைப்பதாக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மசோதா குறித்து விவாதித்து முடிவெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”கன்னடர்களுக்கு 100% வேலை தரக் கோரும் மசோதா இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளது. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இம்மசோதா குறித்து விவாதித்து முடிவெடுப்போம்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “முதலீட்டாளர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். கர்நாடகாவுக்கு அதிக முதலீட்டாளர்கள் வர வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். கன்னடர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது கவலை. கன்னடர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய ஆராய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.