காவிரியில் குறுவை சாகுபடி பொய்த்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கு கடந்த 12ஆம் தேதி முதல் வரும் 31 ஆம் தேதி வரை, நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டுமென கர்நாடகாவிற்கு, காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. எனினும், அந்த உத்தரவை பின்பற்ற கர்நாடகா மறுத்து விட்டது. மேலும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, வரும் 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு, விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும் என அறிவித்தார். மழை பெய்தால் கூடுதல் நீர் திறக்கப்படும் எனவும் சித்தராமையா கூறினார். மேலும், ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்கும் உத்தரவை எதிர்த்து காவிரி ஒழுங்காற்றுக் குழுவில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
இதற்கிடையே, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்துவரும் மழையால், கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 17,297 கன அடியில் இருந்து 21,047 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.