கர்நாடாக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் முடிவான, மாநிலத்திற்கென்ற தனிக்கொடி முறையை தற்போதைய பாஜக அரசு வைவிட முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, மாநிலத்திற்கென்று தனிக்கொடியை கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சித்தராமையா அறிமுகம் செய்து வைத்தார். இதற்கு மாநில அமைச்சரவை சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய மூன்று நிறங்களில் கூடிய அந்தக் கொடியின் மத்தியில் வெள்ளை நிறம் இருப்பதுடன் மாநில அரசின் லோகோவும் இடம் பெற்றிருந்தது.
இதனிடையே கர்நாடகாவில் தேர்தல் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறின. தற்போது முதலமைச்சராக பாஜக சார்பில் எடியூரப்பா உள்ளார். தற்போது இருக்கும் பாஜக அரசு, சித்தராமையா கொண்டு வந்த மாநிலத்திற்கென்ற தனிக்கொடி முறையை கைவிட முடிவு செய்துள்ளது. இந்தத் தகவலை மாநில கலாச்சாரத்துறை அமைச்சரான ரவி உறுதி செய்துள்ளார். தனிக்கொடி முறை தொடராது என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “ தேசியக்கொடியை தவிர மூவர்ண நிறங்களுடன் மற்றொரு கொடியை மாநிலத்திற்கென்று வைக்க அரசியலமைப்பில் இடம் இல்லை. அதேசமயம் அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு கொடிகள் இருக்கலாம். ஆனால் அரசியலமைப்பு ரீதியாக அது சாத்தியம் இல்லை. இதுதொடர்பாக மத்திய அரசை அணுகுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.