செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடக மாநிலத்தில் கடந்த பாஜக ஆட்சியில் 2021 ஆம் ஆண்டு ஓலா, ஊஃபர் மற்றும் ரேபிடோ உள்ளிட்ட பைக் டாக்சிகளுக்கு அப்போதைய அரசு அனுமதி வழங்கியது. அன்று முதல் கர்நாடக தலைநகர் பெங்களூரு உட்பட பல்வேறு மாவட்டங்களில் அவை இயங்கி வருகின்றன. இதற்கு வாடகை கார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களின் வாழ்வாதாரம் பறிபோவதாக போராட்டங்களும் நடத்தினர். இருப்பினும் அன்றைய அரசு அதில் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.
இந்த நிலையில், பைக் டாக்சிகளில் இரவில் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவங்களும் பெங்களூருவில் அரங்கேறியது.
இதையடுத்து கர்நாடகா அரசின் போக்குவரத்து துணை செயலர் புஷ்பா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பைக் டாக்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. பைக் டாக்சிகளின் தேவையை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் பைக் டாக்சிகள் பெரிய அளவில் மக்களுக்கு உதவவில்லை என்று கூறி உள்ளனர். இதனால் கர்நாடகாவில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை கார், ஆட்டோ ஓட்டுநர்கள் வரவேற்றுள்ளனர்.