பயிர்களை குரங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்கு விவசாயி ஒருவர் விநோதமான செயலை செய்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகந்த கவுடா. இவர் நல்லூரு என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் உத்தரா கன்னடா மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தனது பயிர்களை குரங்களிடமிருந்து காக்க புலியின் பொம்மையை பயன்படுத்தியதை அறிந்தார். ஆகவே தனது பயிர்களையும் குரங்குகளிடமிருந்து காக்க இவர் புலி பொம்மையை பயன்படுத்தினார்.
இவர் பயன்படுத்திய இரண்டு நாட்களில் எதிர்பார்த்த மாதிரியே குரங்குகள் பயந்து பயிர்களுக்கு வரவில்லை. இதனைத் தொடர்ந்து மீண்டும் இந்தப் பொம்மையை வேறு ஒரு பகுதியில் வைத்தார். அந்தப் பகுதியிலும் குரங்குகள் வரவில்லை. எனினும் இந்தப் பொம்மைகளை நீண்ட நாட்கள் நம்ப முடியாது என்று நினைத்து வேறு ஒரு முடிவு எடுத்தார் ஸ்ரீகந்தா.
அதன்படி தனது நாயை புலியை போல் வண்ணம் பூச திட்டமிட்டார். இதற்காக ஒரு டை கலரை வாங்கி தனது நாயின் உடம்பில் புலியை போல் வண்ணத்தை பூசினார். தற்போது இந்த நாயை தனது விவசாய நிலத்தில் விட்டுள்ளார். இந்த வண்ணம் நாயின் உடம்பில் ஒரு மாதம் வரை இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். தனது பயிர்களை காக்க ஒருவர் தனது நாய்க்கு புலி போல் வண்ணம் பூசி உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்கலாமே: காட்டு விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க விவசாயியின் புத்திசாலி யோசனை