பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் இதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கூறிய புகார் பரபரப்பானது. இதையடுத்து ரூபா டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். டி.ஜி.பி. சத்திய நாராயண ராவ் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார். இந்த நிலையில், சத்திய நாராயணராவ் கர்நாடக அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ரூபா மீது பரபரப்பு புகார்களை கூறியுள்ளார்.
’சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக கடந்த மாதம் பதவி ஏற்றார் ரூபா. அவருக்கு பெங்களூரு, துமகூரு பெண்கள் சிறை மற்றும் திறந்தவெளி சிறைகளை கண்காணிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அவர், பல்லாரி, பெலகாவி, இண்டல்கா, தார்வார் மற்றும் கலபுரகி சிறைகளைக் கண்காணிக்கும் பொறுப்பையும் கேட்டார். இதுபற்றி உள்துறை அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொன்னேன். இந்த விவகாரம் தொடர்பாக எனக்கும், ரூபாவுக்கும் ஆரம்பத்திலேயே மோதல் உருவானது. சிறைத்துறைக்கு உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதனை ரூபா பலமுறை மீறி இருந்தார். இதன் காரணமாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பினேன். இதனால் மீண்டும் மோதலில் ஈடுபட்டார். சிறை கைதிகளின் புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இதுவும் விதி மீறல். அதுபற்றி உரிய விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பினேன். இந்நிலையில் சிறையில் நடத்திய ஆய்வு குறித்து ரூபா எனக்கு அறிக்கை அனுப்பினார். அது என் கையில் கிடைக்கும் முன்பு சேனல்களுக்கு சென்றுவிட்டது. அந்த அறிக்கையால் சிறைத்துறைக்கு களங்கத்தையும், கெட்ட பெயரையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாக ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது’ என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் சத்திய நாராயண ராவ்.