செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடக மாநிலம் ஹாவேரி ஷிகாவி தொகுதியில் கடந்த 1999-ல், காங்கிரஸ் கடைசியாக வெற்றி பெற்றது. பின்னர் நடந்த ஐந்து தேர்தல்களிலும் சுயேச்சை ஒரு முறையும், பாஜக, நான்கு முறையும் வெற்றி பெற்றது. பாஜக, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தொடர்ந்து நான்கு முறை வெற்றி வாகை சூடினார். இந்த தொகுதியில் லிங்காயத், குருபர், முஸ்லீம் ஓட்டுகள் சரிசமமாக உள்ளன.
இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். சித்தராமையா முதல்வராக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்ட போதிலும், அவர் சார்ந்த குருபர் சமூக ஓட்டுகள் பிரிந்தன. இதையடுத்து தற்போது நடந்த இடைத்தேர்தலில் பசவராஜ் பொம்மை மகன் பரத் பொம்மையை எதிர்த்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி மகள் வைசாலி போட்டியிடுவார் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் கடைசி நேரத்தில் யாசிர் அகமதுகான் பதானுக்கு சீட் கிடைத்தது.
இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ அஜ்ஜம்பீர் காத்ரி எதிர்ப்பு தெரிவித்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து சித்தராமையா கூறியதால் அவர் வாபஸ் பெற்றார். யாசிர் அகமதுகான் ரவுடி என்றும், பாஜக தலைவர்கள் கூறினர். எப்படியும் தங்கள் கோட்டையான ஷிகாவியில் காங்கிரஸ் வெற்றி பெறாது என்று பாஜக தலைவர்கள் மிதப்பில் இருந்தனர். இதனால் பெரிய அளவில் ஷிகாவியில் பிரசாரம் செய்யவில்லை.
தொகுதி மக்கள் தனது மகனை ஆதரிப்பர் என்று பசவராஜ் பொம்மையும் தவறான கணக்கு போட்டு விட்டார். பாஜகவின் அலட்சியத்தை சரியாக கணித்த காங்கிரஸ், அங்கு வெற்றி பெற திட்டங்களை தீட்டியது. அதற்கு தற்போது கை மேல் பலனும் கிடைத்துள்ளது. ஷிகாவியில் 25 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் வெற்றி கனியை பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.