அண்டை மாநிலமான கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அங்கு சமூகநலத்துறை அமைச்சராக இருப்பவர் எச்.சி.மகாதேவப்பா. இவருடைய மகன் சுனில் போஸ். இவர், சாம்ராஜ் நகர் மக்களவை தொகுதியின் எம்பியாக உள்ளார். இந்த நிலையில் ஆஷாட (ஆடி) மாதத்தை முன்னிட்டு மைசூருவில் உள்ள சாமுண்டேஸ்வரி கோயிலில் சுனில் போஸ் சிறப்பு தரிசனம் செய்தார்.
இந்த தரிசனத்தின்போது, அவருடன் சுற்றுலா துறை துணை இயக்குநரான சவிதா என்பவரும் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது தரிசனத்தை முடித்துக் கொண்டு ஆதரவாளர்கள் முன்னிலையில் அந்தப் பெண் அதிகாரியின் நெற்றியில் சுனில் போஸ் குங்குமப்பொட்டு வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ, போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாவதைத் தொடர்ந்து இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குக் காரணம், முன்னதாக, சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலின்போது சுனில் போஸ் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தன்னுடைய பிரமாண பத்திரத்தில் தெரிவித்து இருந்தார்.
இதை மறுத்து, அதிகாரி சவிதாவுடன் சுனில் போஸ் இருக்கும் புகைப்படத்தை தேர்தல் அதிகாரியிடம் ஆதாரமாக கொடுத்தனர் பாரதிய ஜனதாவினர். மேலும் சுனில் போசுக்கு திருமணமாகி விட்டதாக தெரிவித்தனர். ஆனால் அதை சுனில் போஸ் மறுத்தார். இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் நடந்துள்ளது, கர்நாடக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பதிலளித்த அமைச்சரும், சுனில் போஸின் தந்தையுமான எச்.சி.மகாதேவப்பா, “எனது மகன் அந்தப் பெண் அதிகாரியின் முகத்தில் குங்குமம் இட்டதில் தவறில்லை. யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் குங்குமம் வைக்கலாம். இந்து பாரம்பரியத்தில் சமத்துவம் உள்ளது. அதனால், குங்குமம் வைத்துள்ளார். பிரமாணப் பத்திரத்தில் எனது மகனுக்கு திருமணமானதா, இல்லையா என்பதைச் சரிபார்க்கவும். அதை தேர்தல் அதிகாரி பார்த்து, சட்டப்படி தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்தும் பிரமாணப் பத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் மனு ஏற்கப்பட்டு, அனைத்தும் சட்டப்படி நடக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.