பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடக்கிறது.
கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் இருமுறை கெடு விதித்தும், அதை ஆளும் மதசார்பற்ற ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு புறக்கணித்துவிட்டது. இதனால், அம்மாநிலத்தில் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது
சட்டமன்ற விவாதத்தின் போது ஆளுங்கட்சியினர், திங்கட்கிழமை வரை விவாதம் நடத்த கோரிக்கை விடுத்தனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறு கிறது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அக்கட்சி அறிவித்துள்ளது. கர்நாடக பேரவையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து ஆளுநர், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.