கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது நீண்ட கால நண்பரான மறைந்த சித்தார்த்தா குடும்பத்துடன் சம்பந்தம் பேசி முடித்துள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலானது, டி.கே.சிவக்குமார் - சித்தார்த்தா இடையிலான நட்பு.
'காஃபி டே' என்ற இந்தியாவின் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை எழுப்பியவர்தான் கர்நாடகாவைச் சேர்ந்த வி.ஜி.சித்தார்த்தா. கடன் தொல்லை உள்ளிட்ட சில விஷயங்கள் காரணமாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இவரின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் கூறப்பட்டாலும், மறைவு என்னவோ பேரிழப்புதான்.
இப்போது சித்தார்த்தா வீட்டில் கெட்டிமேள சத்தம் ஒலிக்க இருக்கிறது. சித்தார்த்தாவின் மகன் அமர்த்தியா ஹெக்டேவுக்கும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், அரசியல்வாதிகளிலேயே பெரும் பணக்காரர் எனக் கூறப்படும் டி.கே.சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது.
டி.கே.சிவக்குமாரும், சித்தார்த்தாவும் நீண்ட கால நண்பர்கள். சித்தார்த்தாவின் மாமனாரான கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் நெருங்கிய உதவியாளராகவும், குடும்ப நண்பராகவும் இருந்து வருகிறார் சிவக்குமார். எஸ்.எம்.கிருஷ்ணா மூலம் இருவரும் நண்பர்களாகினர். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இவர்களின் நட்பு தொடர்ந்தது.
சித்தார்த்தா மரணத்தின்போதுகூட, சிவக்குமாரை சுற்றிச் சர்ச்சை எழுந்தது. 2017-ல் சிவக்குமாரின் வீட்டில் ஐ.டி சோதனை நடந்தது. இதற்கு அடுத்த இரண்டே நாளில் 'காஃபி டே' உரிமையாளர் சித்தார்த்தா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சித்தார்த்தா, சிவக்குமார் பிசினெஸ் தொடர்பாக பல பணப் பரிமாற்றங்கள் செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான ஆவணங்கள் சிவக்குமார் வீட்டில் சிக்கியதைத் தொடர்ந்தே சித்தார்த்தா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டதாக பேசப்பட்டது. சிவக்குமார் வருமான வரித்துறை விசாரணைக்கு செல்லும்போதெல்லாம் அவருடன் சித்தார்த்தாவும் சென்றார்.
இதற்கிடையே, சித்தார்த்தா இறந்தபிறகு தன் நண்பரின் மகனுக்கு தனது மகளை திருமணம் செய்ய முடிவு செய்து அதற்கான பேச்சுவார்த்தையில் கடந்த ஜூன் மாதம் ஈடுபட்டார். இரு வீட்டாரும் இந்த சம்பந்ததிற்கு ஓகே சொல்ல, நேற்று பெங்களூருவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.
இந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு இரு குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய அரசியல்வாதிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா போன்ற சிலர் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது தந்தை மறைந்ததிலிருந்து 'காபி டே' வியாபாரத்தை அமர்த்தியா கையாண்டு வருகிறார். டி.கே.சிவக்குமார் நிறுவிய பொறியியல் கல்லூரியான 'குளோபல் அகாடமி ஆஃப் டெக்னாலஜி'யை ஐஸ்வர்யா நிர்வகிக்கிறார். எஸ்.எம்.கிருஷ்ணா சிவக்குமாரின் அரசியல் தந்தையாக பார்க்கப்படுபவர். கிருஷ்ணாவின் உதவியாளராக இருந்துதான் சிவக்குமார் இந்த நிலைக்கு வந்துள்ளார். இதனால் இந்தத் திருமணம் இரு குடும்பத்திற்கும் இடையேயான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்தும். அரசியல் ரீதியாகவும் இந்த நிகழ்வு கவனிக்கத்தக்கது.