செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த சித்தராமையா தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகள் வாங்கிக் கொடுத்ததாக சமூக ஆர்வலர் ஆபிரகாம் என்பவர், அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் புகார் செய்தார். இந்த புகாரின் மீது வழக்குத் தொடர ஆளுநர் அனுமதி அளித்தார்.
இதையடுத்து ‘சித்தராமையா பதவி விலக வேண்டும்’ என எதிர்க் கட்சிகள் தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகிறது. இன்னொருபக்கம், ‘ராஜினாமா செய்யமாட்டேன்’ என சித்தராமையா கூறி வருகிறார்.
இருப்பினும் நாளுக்கு நாள் நெருக்கடி முற்றியதால், ‘அடுத்த முதல்வராக யாரை நியமிக்கலாம்?’ என காங்கிரஸ் மேலிட பொதுச்செயலர் வேணுகோபால், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவுக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர், ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து நேற்று பெலக்காவி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் மற்றும் தியாகிகள் கவுரவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடகா முதல்வர் சித்தராமையா, “நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் எந்த தவறும் நடக்கவில்லை. என்னை யாராலும் பதவியிலிருந்து நீக்க முடியாது, மக்களின் ஆசீர்வாதம் எனக்கு உள்ளது. மக்களின் ஆதரவு இருக்கும் வரை நானே முதல்வராக நீடிப்பேன். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்க கூடாது என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது. அதனால்தான் எனக்கு எதிராக சதி செய்கிறது பாஜக. கர்நாடக அமைச்சரவையில் மாற்றம் குறித்து மேலிடம் முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.