கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முகமது கைஃப் முல்லா அம்மாநிலத்தில் நடைப்பெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 625 மதிப்பெண்களுக்கு 624 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றார். ஆனால் தான் எப்படி ஒரு மதிப்பெண்ணை தவறவிட்டேன் என்பதை அறிய மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார்.அதில் அவருக்கு முழுமதிப்பெண்கள் கிடைத்தது. இதன்மூலம் அனைத்து பாடங்களிலும் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கைஃப், “ நான் அனைத்து பாடங்களிலும் 100 சதவீத மதிப்பெண்கள் பெறுவேன் என நம்பிக்கையுடன் இருந்தேன். தேர்வுக்கும் பின்னர் நான் அளித்த விடைகள் சரியாக உள்ளதா என்பதை ஆசிரியர்களிடம் கேட்டும், பாடபுத்தகங்களை பார்த்து உறுதி செய்துக்கொண்டேன். நான் அளித்த விடைகள் அனைத்து சரியாகவே இருந்தது. ஆனால் தேர்வு முடிவு வெளியான போது நான் 624 மதிப்பெண்கள் மற்றுமே பெற்றிருந்தேன். ஆனால் மறுக் கூட்டலில் நான் எதிர்ப்பார்த்த மதிப்பெண்கள் கிடைத்து” என்றார்.
கைஃப்பின் தாய் தந்தை இருவருமே ஆசிரியர்கள். இவரது தந்தை ஹரூன் ரஷித் முல்லா அரசு தொடக்கப்பள்ளியில் உருது ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது தாய் அரசு பள்ளியில் கன்னட ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
கைஃப் தந்தை பேசுகையில், கைஃப் நன்றாக படிக்கக்கூடியவன். மற்றவர்களை போல் சமூகவலைதளங்களில் போன்ற தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை வீணாக்கமாட்டான். என்னுடைய ஆசை எல்லாம் அவன் கடுமையாக படித்து ஒரு சாதனையாளனாக வரவேண்டும் என்பது தான் என்றார்.