கர்நாடக மாநிலம் கோலார் அடுத்த மாலூர் நகர பகுதியைச் சேர்ந்தவர்கள் பூவரசன் - நந்தினி தம்பதியர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நந்தினி, கோலார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை குழந்தையும் தாயும் மருத்துவமனையில் தூங்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மூன்று பெண்கள் குழந்தையை எடுத்து பையில் வைத்து கடத்திச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சிறிது நேரம் கழித்து தாய் நந்தினி எழுந்து பார்த்த போது, அருகில் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து வந்து மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மூன்று பெண்கள் பையில் குழந்தை கடத்திச் செல்வது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து குழந்தையை கடத்திச் சென்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு மாவட்ட எல்லைகளில் கண்காணிப்கை தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில் தமிழக கர்நாடகா மாநில எல்லையான ஓசூர் அடுத்த பேரிகை அருகே கர்நாடக மாநில எல்லையில் அம்மாநில போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈட்டுப்பட்டனர், அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் கைக் குழந்தையுடன் வந்தவர்களை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் பெயர் சுவாதி என்றும், 10 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தை வாங்கிக் கொண்டு தமிழகத்திற்கு செல்வதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து சுவாதியை கைது செய்து குழந்தையை மீட்ட போலீசார், குழந்தையை தாயிடம் ஒப்பதைத்து குழந்தை கடத்திச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.