மேகதாது அணை அமைக்க அனுமதி தர வேண்டும் என பிரதமரிடம் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்திற்கு இடையே எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து பேசினார். அவர் பேசும்போது, “கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அது தொடர்பாக பிரதமரை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு என்ன நிலை எடுக்கப்போகிறது?. எதிர்க்கட்சிகளுடன் கலந்துபேசி முதல்-அமைச்சர் தலைமையில் ஒரு குழு பிரதமரை நேரில் சென்று சந்தித்து வலியுறுத்தலாம். கர்நாடக அரசுடனும் பேசவேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. நமக்கு வழங்கப்பட வேண்டிய நீர் முழுமையாக வழங்கப்பட வேண்டும். இந்த நீரை தடுக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது எதிர்க்கட்சி துணை தலைவருக்கு நன்றாக தெரியும். ஆகவே, அவர்கள் எந்த வகையிலும் மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கின்றேன். நம்முடைய உரிமையை நிலைநாட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு முழுமையாக நமக்கு சாதகமாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், மேகதாது அணை அமைக்க அனுமதி தர வேண்டும் என பிரதமரிடம் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகளின் வேதனையை போக்க காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை அமைக்க அனுமதி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.