இந்திய அரசியலுக்கும் டீக் கடைக்கும் என்னதான் அப்படி ஒரு ராசியோ தெரியவில்லை. குஜராத்தில் இருந்து ஒரு டீக்கடைக்காரர் நாட்டிற்கே பிரதமராகிவிட்டார். பெரியக்குளத்தில் டீக்கடை நடத்தி வந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராகவே ஆகிவிட்டார். இப்போது கர்நாடகா சட்டசபை தேர்தலில் புயலைக்கிளப்பி வருகிறார் ஒரு டீக்கடைக்காரர். ஆனால் இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே கோடீஸ்வரர்.
அதாவது 399 கோடிக்கு அதிபதி. ஆனால் அரசியல் வாடையே இல்லாமல் தேர்தலில் சுயேட்சையாகக் களம் இறங்கி இருக்கிறார். ஆங்கில ஊடகங்கள் எல்லாம் அவரை சுற்றியே சுற்றி சுழன்று வருகின்றன. அந்த அதிபதி அனில்குமார். இன்று பணக்காரராக இருக்கும் இவர் ஒரு காலத்தில் இரண்டு இட்லிக்கே வழியில்லாமல் ப்ளாட் ஃபார்மில் படுத்து தூங்கியவர். அடுத்த வேளை ஆகாரத்திற்கே வழியில்லாமல் இருந்த அனில் எப்படி கோடீஸ்வரர் ஆனார்?
அவரது கதையைக் கேட்டால் ரஜினியின்‘அண்ணாமலை’படத்தில் வரும் பாடல் காட்சிபோல் இருக்கிறது. அவர் பசுமாட்டு பாலை வைத்து பால்கோவா தயாரித்தார். இவர் அதே பாலை வைத்து டீக்கடை நடத்தி பணக்காரராக ஆகியிருக்கிறார். ஆனால் ரஜினியைப் போல ஒரே பாட்டில் உச்சத்திற்குப் போகவில்லை இவர் வாழ்க்கை. கரடுமுரடான பாதையைக் கடந்து வந்துள்ளது.
11 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய அனில்குமாருக்கு பூர்வீகம் சொந்த மாநிலம் கேரளா. பால்ய வயதிலேயே அப்பாவை இழந்தார். அம்மா மட்டுமே ஆதார ஸ்ருதி. அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என யோசித்தபோது அம்மாவுக்கு வீட்டு வேலை கிடைத்தது. குறைந்தக் கூலிக்கு வீடு வீடாக சுத்தம் செய்யும் வேலைக்குப் போய் அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வயிற்றைக் கழுவியிருக்கிறது இந்தக் குடும்பம்.
அதை பற்றி அனில் இப்போது என்ன சொல்கிறார் தெரியுமா? “ அம்மா வேலைக்குப் போய் நாலு இட்லிகள் கொண்டு வருவார். அவர் சாப்பிடாமல் முதல் இட்லியை எங்களுக்கு ஊட்டிவிடுவார்.” என்கிறார் இந்தக் கோடீஸ்வரர். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் மூன்று பிள்ளைகள். மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அனில் குமார் அதன் பிறகு கூலிவேலைகளை செய்யத் தொடங்கி இருக்கிறார்.
அப்போதும் வீட்டின் வறுமை தீர்ந்தபாடில்லை. பிடுங்கித்தின்ற வறுமையை எதிர்த்து போராட நினைத்த அனில் கேரளாவைவிட்டு பெங்களூருக்கு பிழைப்புத் தேடி புறப்பட்டிருக்கிறார். அப்போது இவருக்கு 11 வயது. இது நடந்தது 1985ம் ஆண்டு. அதன் பின் ஊர்த் திரும்பவே இல்லை. கிடைக்கும் சின்னச் சின்ன வேலைகளை பார்ப்பது. இரவானால் ப்ளாட் ஃபார்மில் படுத்து தூங்குவது எனக் கழிந்துள்ளது இவரது வாழ்க்கை.
ஒருநாள் கடவுளை போல ஒருவர் வந்து இந்தச் சிறுவன் அனிலை தட்டி எழுப்பி இருக்கிறார். கையில் இருந்த சாப்பாட்டு பொட்டலத்தை கொடுத்திருக்கிறார். வயிற்றுப்பசிக்கு உணவளித்தவர் வாழ்க்கையை உயற்றிக் கொள்வதற்கு சில யோசனைகளை சொல்லியிருக்கிறார். அவர் கொடுத்த ஐடியா படி மாம்பழம் வாங்கி விற்பனை செய்திருக்கிறான் இந்தச் சிறுவன். அந்த நேரம் மாம்பழ சீசன். ஆகவே அமோக விற்பனை. பிறகு சொல்ல வேண்டுமா? பிசினஸ் பல்ஸ் தெரிந்துவிட்டது இந்த அனில் குமாருக்கு. பிறகு மரத்தைவிட்டு தாவும் அணிலைபோல சீசனுக்குத்தக்க வியாபாரத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார் இந்த அனில்.
இப்படியே சிறுத்தொழில் புரிந்து வந்த இவருக்கு அமோகம் அடித்தது ஒருநாள். 1990ல் ஐடி நிறுவனங்கள் பெங்களூருவை மொய்க்கத் தொடங்கிய காலத்தில் அந்த கம்பெனிகளுக்கு டீ சப்ளை செய்திருக்கிறார் அனில். கூடவே ஷோரூம்ஸ், பல்பொருள் அங்காடிகள் என ஏறி இறங்கி டீக்களை விற்றார். நிரந்தர கஷ்டமர், தரமான வருமானம் என பெருகியது வாழ்க்கை. உடனே கடையை பிரமாண்டப்படுத்தினார். சாதாரண டீக்கடை முதலாளி வருமானம் குவியும் அதிபதியானார். ஆயிரம் லட்சமானது. லட்சம் கோடியானது.
இன்றைக்கு பெங்களூரு பம்மனஹல்லி சட்டசபை தொகுதியில் கோடீஸ்வர பிரமுகர் இவர். அனிலிடம் வெளிநட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 16 கார்கள் உள்ளன. அத்தனையின் விலையும் கோடி ரூபாய்க்கு மேலானது. வியாபரத்தில் பல விளைச்சல்களை பார்த்த அனில் இப்போது இந்தத் தொகுதியின் சட்டசபை வேட்பாளாரகவும் களம் கண்டிருக்கிறார். அதுவும் பாஜக வேட்பாளரான சதீஷ் ரெட்டியை எதிர்த்து சுயேட்சையாக என்றால் சும்மாவா? அடுத்த மாதம் 12 தேதி நடக்க இருக்கும் சட்டசபைத்தேர்தலில் போட்டியிடும் ஸ்டார் வேட்பாளர் தற்போதைக்கு இவர்தான். அனில் பெயர் பெங்களூரில் அனில் அம்பானி அளவுக்கு உயர்ந்து போய் நிற்கிறது.