குழந்தைகளுக்குக் கல்வியைக் கொடுப்பதற்காக அரசுகள் பல வழிகளிலும் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழக அரசு, காலை உணவுத் திட்டம் முதல் நிதி உதவித் திட்டம் வரை பலவகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவச் செல்வங்களின் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதுபோன்ற திட்டங்களை பிற மாநில அரசுகளும் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், கர்நாடகாவில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு முட்டைகளைப் பரிமாறிவிட்டு, பின்னர் ஊழியர்களே அதை எடுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், பள்ளிக் குழந்தைகளுக்கு உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இது, பிற மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில், கர்நாடக மாநிலத்திலும் அமலில் உள்ளது.
அம்மாவட்டத்தின் குண்டூர் கிராமத்தில் உள்ள ஓர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு உணவோடு முட்டை பரிமாறப்பட்டுள்ளது. இதனை ஊழியர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். பின்பு அந்தக் குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு பிரார்த்தனை செய்கின்றனர். அதன்பின் தட்டில் இருந்த முட்டைகளை குழந்தைகள் சாப்பிடும் முன்பே அங்கிருந்த ஊழியர் வேகவேகமாய் எடுத்து விடுகிறார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அங்கன்வாடி ஊழியர்களான லட்சுமி, ஷைனஜா பேகம் ஆகியோரை கர்நாடக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
கர்நாடக அங்கன்வாடி மையங்களில் இத்தகைய மோசமான நிலைமைகள் வெளிச்சத்துக்கு வருவது இது முதல் முறையல்ல. ஜூன் மாதம், கர்நாடகா மாநில சட்ட சேவைகள் ஆணையம் (KSLSA), பெங்களூரு, அரசு நடத்தும் அங்கன்வாடிகளில் பல குறைபாடுகளை சுட்டிக்காட்டியதாகக் கூறப்படுகிறது. பல அங்கன்வாடிகள் மையங்களில் பதிவேட்டில் உள்ள குழந்தைகளைத் தவிர பிற குழந்தைகள் கணக்கில் காட்டப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் பல மையங்களில் கழிப்பறைகள் இல்லாமை, அடிப்படை வசதிகள் இல்லாமை, பள்ளிகளில் கதவுகள் இல்லாமை உள்பட பல்வேறு விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. குறிப்பாக, மையத்தில் இருக்க வேண்டிய முதலுதவிப் பெட்டி ஊழியரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான இதுபோன்ற புகார்கள், கர்நாடக அரசியலில் பேசுபொருளாகி உள்ளது.