செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
பீதர் மாவட்டம், அனந்தூர் கிராமத்தில் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட தண்ணீரில் துர்நாற்றம் வீசி வந்துள்ளது, இதனால் கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர், முதலில் அதிகாரிகளும் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து இருக்கலாம் என நினைத்து ஆய்வு செய்தனர், ஆனால், அது போன்று ஏதுவும் இல்லாத நிலையில், நீர்த்தேக்கத் தொட்டியை நேற்று மாலை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த நீர்த்தேக்கத் தொட்டியில், இளைஞர் ஒருவரின் சடலம் மிதிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர், பீதர் மாவட்டம், அனந்தூர் கிராமத்தில் வசித்து வந்த ராஜு (26) என்பதும். நாடோடியான இவர், மதுவுக்கு அடிமையான நிலையில், இவரது மனைவி வீட்டை விட்டுச் சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த ராஜூ, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரது குடும்பத்தினர் அவரைத் தேடி வந்த நிலையில், ராஜு தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில், கடந்த ஆறு நாட்களாக இந்த நீரை மக்கள் குடித்து வந்ததால் அங்கு சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம் அமைத்து மக்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.