கர்நாடகாவில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் ராயச்சூரு மாவட்டத்திலிருந்து குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என கூலித் தொழிலாளர்கள் 24 பேர் வேனில் கூலி வேலை செய்வதற்காக பெங்களூருக்கு நேற்று இரவு புறப்பட்டுச் சென்றுள்ளனர். வேன் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் ஷிரா தாலுகா காலம்பெல்லா என்ற பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதே பாதையில் பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று வேனை முந்திச் செல்ல முயன்று வேன் மீது பலமாக மோதியுள்ளது.
இதில் வேன் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள், மூன்று பெண்கள், நான்கு ஆண்கள் என 9 பேர் நிகழ்வு இடத்தில் படுகாயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வேனில் இருந்த 15 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து ஷிரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.