ஏழை பிராமண சமூக திருமண நிதியுதவித் திட்டம்: கர்நாடக அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ஏழை பிராமண சமூக திருமண நிதியுதவித் திட்டம்: கர்நாடக அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
ஏழை பிராமண சமூக திருமண நிதியுதவித் திட்டம்: கர்நாடக அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
Published on

கர்நாடகாவை ஆளும் மாநில பாஜக அரசால் சில தினங்களுக்கு முன் இரண்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அருந்ததி மற்றும் மைத்ரே என்று அந்த இரண்டு திட்டங்களுக்கும் பெயர் வைக்கப்பட்டன. இந்தத் திட்டங்களின் நோக்கம், பிராமண சமூகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உதவுவதேயாகும். பிராமண சமூகத்தின் பெண்களுக்கு திருமண உதவி தொகை வழங்கும் திட்டங்கள்தான் இவை இரண்டும்.

கர்நாடக மாநில பிராமண மேம்பாட்டு வாரியத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என எடியூரப்பா அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தை மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் 'பிற்போக்குத்தனமானது' என்று குற்றம்சாட்டி எதிர்த்து வருகின்றன.

காரணம், அருந்ததி திட்டத்தின் கீழ், திருமணம் ஆகும் பெண்ணின் குடும்பத்திற்கு திருமணத்திற்காக ரூ.25,000 வழங்கப்படும். அதேபோல் மைத்ரேய் என்று அழைக்கப்படும் மற்றொரு திட்டத்தில், பிராமண சமூகத்திற்குள் பிராமண சமூக மணமகள் திருமணம் செய்து கொண்டால் அல்லது ஓர் அர்ச்சகரை புரோகிதரை திருமணம் செய்துகொண்டால் ரூ.3 லட்சம் வழங்கப்படும். அருந்ததி திட்டத்தின் கீழ், 550 பிராமண குடும்பங்களும், கிட்டத்தட்ட 25 பிராமண குடும்பங்கள் மைத்ரேய் திட்டத்தின் மூலமும் பயனடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பாக பேசியுள்ள கர்நாடக மாநில பிராமண மேம்பாட்டு வாரியத்தின் இயக்குனர் எச்.எஸ்.சச்சிதானந்தா, ``இந்தத் திட்டங்களைப் பெறுவதற்கு நாங்கள் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். நிதி உதவி கோரும் பிராமண சமூக குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆக இருக்க வேண்டும்.

மேற்கூறிய கட்டுப்பாடுகளைத் தவிர, அது மணமகனுக்கும், மணமகளுக்கும் முதல் திருமணமாக இருக்க வேண்டும். இந்த ஜோடி திருமணமாகி குறைந்தது ஐந்து வருடங்கள் ஆக வேண்டும்" என்றவர், இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டதன் காரணம் குறித்தும் விவரித்தார்.

``ஏழ்மையின் பின்னணியில் இருந்து வரும் மக்களை, குறிப்பாக அர்ச்சகர் அல்லது புரோகிதர்களை மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம். வேலை நிச்சயமற்ற தன்மையால் அவர்கள் தப்பிப் பிழைப்பது கடினம். நாங்கள் கொடுக்கும் பணத்தை அவர்கள் பயன்படுத்தலாம் மற்றும் அவர்களின் வாழ்க்கையை சம்பாதிக்க ஒரு சிறு வணிகத்தை அமைக்கலாம்" என்று அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அரசு தரப்பில் இப்படி கூறினாலும், எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. 'பிராமண சமூகத்துக்கு மட்டும் உதவும் வகையில் இந்தத் திட்டங்கள் அமைந்துள்ளன. 2018 ஆம் ஆண்டின் சாதிவாரி கணக்கெடுப்பின்படி, கர்நாடகாவின் பிராமண மக்கள் தொகை மொத்த மாநில மக்கள்தொகையில் 3% ஆக உள்ளனர். அவர்களில் பெரும்பாலும் வசதி படைத்தவர்களாகவே இருக்கின்றனர். மத்திய அரசு கொண்டுவந்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சான்றிதழை கொடுத்தால் நிதி உதவிக்கு போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான செயல்.

மத்திய அரசு அறிவிப்பின்படி ரூ.8 லட்சம் அல்லது 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள்தான் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பிற்குள் வருவார்கள். ஆனால், அவர்களை விட கர்நாடகாவில் நிறைய ஏழை மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கலாம். அதை விடுத்து, இவர்களுக்கு நிதி கொடுப்பதால் மாநிலத்தின் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும்.

இந்த ஆண்டிற்கான கர்நாடக மாநில அரசின் நிதி பற்றாக்குறை ரூ.46,072 கோடியாகும். வெள்ள நிவாரண நிதிகள் மற்றும் மத்திய அரசின் ஜிஎஸ்டி உள்ளீடு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், அரசு நிதி பற்றாக்குறையில் தள்ளப்பட்டுள்ளது. முதல்வர் எடியூரப்பா, 2020 டிசம்பரில் நிதி பின்னடைவு ரூ.25,000 கோடி முதல் ரூ.30,000 கோடி வரை என்றும், அது அடுத்த பட்ஜெட் வரை நீடிக்கக்கூடும் என்றும் கூறினார். இப்படியான நிலையில் இது தேவையா?' என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

'இதைவிட இத்திட்டத்தில் உள்ள இன்னொரு சிக்கல். எல்லோரும் சாதிக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில், சொந்த சமூகத்திற்குள் திருமணம் செய்தால் நிதி உதவி என்பது பிற்போக்குத்தனமான மற்றும் பெண்கள் விரோதமானது' என்றும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

``திருமணம் என்பது ஒரு தனிப்பட்ட தேர்வாகும். மேலும் சில வகையான திருமணங்களை மற்றவர்கள் மீது ஊக்குவிப்பது பிற்போக்குத்தனமான மற்றும் பெண்கள் விரோதமானது.

ஒரு பெண்ணின் வாழ்க்கையின் ஒரே பகுதி திருமணம் மட்டும்தான் என்று ஏன் பிராமண அபிவிருத்தி வாரியம் சிந்திக்கிறது. இப்படி பிற்போக்குத்தனமான செயல்களுக்கு நிதி கொடுப்பதை விடுத்து, அவர்கள் ஏன் பிராமண பெண் தொழில்முனைவோருக்கு கடன் கொடுக்க கூடாது? ஏழை பிராமண சிறுமிகளின் கல்விக்கு ஏன் நிதியளிக்கக்கூடாது" என்று காங்கிரஸின் இளைஞர் பிரிவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஒய்.பி. ஸ்ரீவத்ஸா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஜனதா தளமும் இத்திட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் இத்திட்டம் அங்கு திடீர் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com