விலங்குகளிடம் பயிரை காப்பாற்ற விவசாயி ஒருவர் எளியை முறையை கையாண்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டத்தை சேர்ந்தவர் சித்தானந்தா கவுடா. இவர் சோராபா பகுதியில் ஒரு சிறிய நிலப் பரப்பில் விவசாயம் செய்து வருகிறார். அந்தப் பகுதியில் இருக்கும் பயிர்கள் அதிகமாக விலங்குகளால் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பல வழிகளை கையாண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சித்தானந்தா கவுடா ஒரு எளிய வழியை கையாண்டுள்ளார். அதாவது அவர் ஒரு மைக்ரோசிப் மற்றும் ஸ்பிக்கர் ஆகியவற்றை வாங்கி உள்ளார். இதில் அவருடைய பேச்சையும் நாய்கள் குரைப்பது போன்ற சத்ததையும் பதிவு செய்துள்ளார். பின்னர் இந்தச் சத்தம் திரும்பி திரும்பி வரும் வகையில் ஸ்பிக்கரை மாட்டியுள்ளார். இதன் மூலம் அவரது பயிரை விலங்குகளிடம் காப்பாற்றியுள்ளார்.
இதுகுறித்து அவர், “எங்கள் பகுதியில் மான்கள், குரங்குகள், காட்டு எருமைகள் உள்ளிட்ட விலங்குகள் பயிர்களை நாசம் செய்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்த விலங்குகளால் சுமார் 30 சதவிகித பயிர்கள் சேதப்படுத்தப்படும். இதனால் நான் இந்தப் புதிய முறையை பயன்படுத்த திட்டமிட்டேன். என்னுடைய குரலையும் நாய்கள் குரைப்பதையும் ரெக்கார்ட் செய்து ஸ்பீக்கரில் வரும் வகையில் செய்தேன். இதன்மூலம் விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தாமல் நான் காப்பாற்றியுள்ளேன்.
விலங்குகளிடமிருந்து தங்களது பயிர்களை காப்பாற்ற சிலர் வனவிலங்குகளை கொன்று விடுகின்றனர். ஆனால் நான் விலங்குகளின் உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தேன். ஆகவே தான் இந்த முறையை என்னுடைய நிலத்தில் பயன்படுத்தி உள்ளேன்” எனத் தெரிவித்தார்.