கார்கில் வீரர் வெளிநாட்டவர் என சொன்ன அரசு: கைவிட்ட ராணுவம்

கார்கில் வீரர் வெளிநாட்டவர் என சொன்ன அரசு: கைவிட்ட ராணுவம்
கார்கில் வீரர் வெளிநாட்டவர் என சொன்ன அரசு: கைவிட்ட ராணுவம்
Published on

அசாமில், தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ள கார்கில் வீரர் விவகாரத்தில் தலையிட முடியாது என்று ராணுவம் தெரிவித்துள்ளது. 

அசாமில், பங்களாதேஷை சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஊடுருவி வருவதால் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பெயர்கள் விடுபட்டு இருந்தன. மேலும் 37 லட்சம் பெயர்கள் நிராகரிக்கப் பட்டு இருந்தன. இரண்டு லட்சம் பெயர்கள், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டன. 

இந்நிலையில், கவுகாத்தி சத்கோன் பகுதியை சேர்ந்த முகமது சனாவுல்லா (57) என்பவர் வெளிநாட்டை (பங்களாதேஷ்) சேர்ந்தவர் என சந்தேகம் இருப்பதாக, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டது. இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். கார்கில் போரில் கலந்து கொண்டவர். இதற்காக குடியரசுத் தலைவரிடம் விருது வாங்கியவர். பின்னர், எல்லைப் பாதுகாப்பு போலீசில், துணை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இவரது குடியுரிமை தொடர்பான வழக்கை, வெளிநாட்டினர் தீர்ப்பாயம் விசாரித்தது. இறுதியில், முகமது சனாவுல்லா வெளிநாட்டுக்காரர்தான் என தீர்ப்பாயம் உறுதி செய்து, தடுப்பு முகாமுக்கு அனுப்பியது.

சனாத்துல்லாவின் உறவினர் முகமது அஜ்மல் ஹோக் என்பவர் கூறும்போது, ‘’ஓய்வு பெற்ற ஒரு ராணுவ வீரரை இதை விட மோசமாக நடத்த முடியாது. 30 வருடமாக ராணுவத்தில் பணியாற்றியவருக்கு கிடைத்த பரிசு இதுதானா?’’ என்றார்.

கவுகாத்தியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ரஞ்சித் பர்தாகூர் என்பவர் கூறும்போது, ‘’அவர் பங்களாதேஷ்காரராக இருந்தால், இந்திய ராணுவத்தில் எப்படி 30 வருடம் பணியாற்ற முடியும்? பிறகு எல்லை பாதுகாப்பு போலீசிலும் எப்படி பணியாற்ற முடியும்? ராணுவம் அவர் குடியுரிமையை பரிசீலிக்காமலா சேர்த்திருக்கும்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை எதிர்த்து கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் சனாவுல்லா குடும்பத்தினர் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘’சனாத்துல்லாவின் மனைவி ஷமினா பேகத்தை சந்தித்து, என்ன உதவி என்றாலும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளோம். சட்டரீதியான பிரச்னை என்பதால் இந்த விவகாரத்தில் ராணுவம் குறைந்த அளவுதான் தலையிட முடியும். சட்டரீதியாக அவர் இதிலிருந்து வெளியே வருவார் என்று நம்புகிறோம். அவருக்கான சட்ட உதவிகளுக்கும் உதவுவதாக தெரிவித்துள்ளோம்’’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com