கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரை, சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டுக்காரர் என்று கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தி சத்கோன் பகுதியை சேர்ந்தவர் முகமது சனாவுல்லா (57). இந்திய ராணுவத்தில் லெப்டினென்டாக பணியாற்றிய இவர், கார்கில் போரில் பங்கேற்றவர். ராணுவத்தில் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவர், வேலை தேடி வந்தார். அசாம் மாநில எல்லை காவல் படைப் பிரிவுக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் வந்தது. விண்ணப்பித்தார். கடந்த 24 ஆம் தேதி அதில் சனாவுல்லாவுக்கு அங்கு துணை இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்தது.
அசாமில், பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக பலர் குடியேறியுள்ளனர் என்றும் அங்குள்ளவர்கள், 1971-ஆம் ஆண்டுக்கு முன்பே அங்கு வசித்து வருபவர்கள்தானா என்பதற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்காக, வெளி நாட்டுத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீப்பாயத்தில் இருந்து நேரில் ஆஜராகும்படி, சனாவுல்லாவுக்கு சம்மன் வந்தது. அவர் சென்றார். அவரை கோவால்புராவில் உள்ள தடுப்பு காவல் மையத்துக்கு கொண்டு சென்றனர். அவர் வெளிநாட்டுக்காரர் என்றும் சட்டவிரோதமாகக் குடியேறி வசித்துவருகிறார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அங்குள்ள போகோ நகரில் உள்ள வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயம், கடந்த வருடம் முகமது சனாவுல்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அவர் அங்கு ஐந்து, ஆறு முறை சென்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் இந்திய ராணுவத்தில் சேர்ந்த வருடத்தை 1987 என்று சொல்வதற்குப் பதிலாக, 1978 என்று தவறாகக் கூறிவிட்டார். இதையடுத்து அவர் வெளிநாட்டுக்காரர் என்று தீர்ப்பாயம் தீர்ப்புக் கூறி கைது செய்துள்ளது.
இதுபற்றி சனாத்துல்லாவின் உறவினர் முகமது அஜ்மல் ஹோக் கூறும்போது, ‘’ஓய்வு பெற்ற ஒரு ராணுவ வீரரை இதை விட மோசமாக நடத்த முடியாது. 30 வருடமாக ராணுவத்தில் பணியாற்றியவருக்கு கிடைத்த பரிசு இதுதானா?’’ என்றார். இவரும் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கும் வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியது. அது தவறு என்று தெரிந்த பின், போலீசார் அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.
தீர்ப்பாயத்தின் இந்தச் செயலை எதிர்த்து சனாத்துல்லாவின் குடும்பத்தினர் மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.