1999-ல் பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்து வெற்றிக்கொடி! கார்கில் போர் 25ம் ஆண்டு நினைவு தினம் இன்று!

அண்மைக் காலத்தில் இந்தியா எதிர்கொண்ட போர் என்றால், அது கார்கில் போர் தான். 1999ம் ஆண்டு இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்து, வெற்றிக்கொடியை நாட்டிய வரலாறை, 25 ஆண்டுகள் பின்னோக்கிக் பார்க்கலாம்.
கார்கில் போர் நினைவு தினம்
கார்கில் போர் நினைவு தினம்முகநூல்
Published on

செய்தியாளார்: ரவிக்குமார்

அண்மைக் காலத்தில் இந்தியா எதிர்கொண்ட போர் என்றால், அது கார்கில் போர் தான். இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்து, வெற்றிக்கொடியை நாட்டிய வரலாறை, 25 ஆண்டுகள் பின்னோக்கிக் பார்க்கலாம்.

திருச்சியில், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் பயணித்தவர்கள், இந்த ரவுண்டானாவை பார்க்காமல் கடந்திருக்க முடியாது. நிச்சயமாக இது ரவுண்டானா இல்லை.கார்கில் போரில் இந்தியா பெற்ற வெற்றியின் பெருமை கூறும் சின்னம்.இதில் உருவப்படமாக உறைந்திருப்பது, மேஜர் சரவணன். வெற்றிச் சின்னத்திலிருந்து அரசு மருத்துவமனை செல்லும் சாலை, இவரது பெயரைத் தான் தாங்கியிருக்கிறது.

கார்கில் போரின் வெற்றிக்கான வேர், நம் நாடு முழுவதும் பரவியிருக்கிறது. இந்த வேர்களால், கார்கிலில் அறுவடை செய்த வெற்றியின் வெள்ளி விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கார்கிலில் அப்படி என்ன நடந்தது....? போர் மூண்டது எதற்காக...? என்ற வரலாறை, கால் நூற்றாண்டு பின்னோக்கிப் பார்க்கலாம்..

இந்தியா - பாகிஸ்தானின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, கார்கில் மாவட்டத்தின் வழியே செல்கிறது. கடல் மட்டத்தில் இருந்து, கிட்டத்தட்ட 15 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. கடுங்கோடை காலத்தில் கூட, இங்கு, கொடும் குளிர் வாட்டும். 1999 ஆம் ஆண்டின், மே 3 ஆம் தேதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள கிளர்ச்சியாளர்கள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து, இந்தியப் பகுதிக்குள் ஊடுருவியது தான், தொடக்கப் புள்ளி.

அப்போது பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக இருந்த முஷாரப்பின் கண்காணிப்பில் தான், இந்த அத்துமீறலே அரங்கேறியது. கிளர்ச்சியாளர்களுடன் கரம் கோர்த்து, பாகிஸ்தான் ராணுவமும் எல்லை தாண்டியது.உயரமான இடங்களை அடைந்த இந்த கூட்டுப்படை, மே 5 ஆம் தேதி, இந்தியப் படையின் மீது தாக்குதலைத் தொடங்கியது.

கார்கில் போர் நினைவு தினம்
காலை தலைப்புச் செய்திகள்|பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா To குழந்தைகளின் இன்னுயிரை நீத்த வாகன ஓட்டுநர்!

அத்துமீறலை அனுமதிக்காத இந்திய வீரர்கள், தீரத்துடன் துப்பாக்கிகளை ஏந்தி, தோட்டாக்களைத் தெறிக்க விட..., தொடங்கியது கார்கில் போர். எங்களது கார்கிலை, இந்தியா ஆக்கிரமித்திருக்கிறது என்று அபாண்டமாக பொய்யுரைத்தது பாகிஸ்தான்.. கார்கில் எங்கள் சொந்த மண் என,விடாப்பிடியாக இருந்தது இந்தியா. உரிமை கொண்ட மண்ணை விட்டுவிடக் கூடாதென, உறுதியாக இருந்த இந்தியா, ஆபரேஷன் விஜய் என்ற செயல்திட்டத்துடன் களம் கண்டது..

இந்திய ராணுவத்துடன் வான்படையும் இணைந்தது. மே மாதம் மூண்ட போர், இரவு பகலாக தொடர்ந்தது. ஜூன் மாதம் கடந்து, ஜூலையிலும் நீடித்தது. ’விஜய்' என்றால் வெற்றி. நிச்சய வெற்றிக்காக 'ஆபரேஷன் விஜய்' செயல்திட்டத்துடன் சூளுரைத்தது போலவே, வெற்றியை வசப்படுத்தியது இந்தியப் படை. பாகிஸ்தான் ஆக்கிரமிக்க முனைந்த கார்கில் மண்ணில், மூவர்ணக் கொடியை பறக்கவிட்டனர் இந்திய வீரர்கள்.

வெற்றிக் கொடி பட்டொளி வீசிப் பறந்தது, ஜூலை 26 ல் இன்று கார்கில் வெற்றியின் வெள்ளி விழா. பெருமையுடனும் இறுமாப்புடனும் நாம் கொண்டாடும் இந்த சரித்திர வெற்றி, எளிதில் கிடைத்திடவில்லை. இதற்காக, 527 வீரர்களின் வீரமரணத்தை விலையாகக் கொடுத்திருக்கிறோம்.

ஆயிரத்து 300க்கும் அதிகமான வீரர்கள், விழுப்புண்களை பரிசாகப் பெற்றனர்.. கார்கில் வெற்றிக்காக, இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு குழுவும், தங்கள் தீரத்தை வெளிப்படுத்தியது.

மேஜர் சரவணன்

மேஜர் சரவணன்
மேஜர் சரவணன்

இதற்கு ஓர் உதாரணம் தான், திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன் தலைமையிலான படை. மே 29 ல், பதாலிக் பகுதியில், ராக்கெட் லாஞ்சர்களால், எதிரிகளின் தாக்குதலை முறியடித்தார் மேஜர் சரவணன். இவர் தலைமையேற்ற படை, அடுத்தடுத்து எதிரிகளை வீழ்த்தி, கார்கில் நோக்கி முன்னேறியது. எதிரிகளின் தாக்குதலில் காயமுற்று வீழ்ந்தபோதும், இவர் மடிந்துவிட்டதாகக் கருதி, அருகே வந்த எதிரிகளைக் கொன்ற பிறகே வீரமரணம் எய்தினார் மேஜர் சரவணன்.

இவர் நினைவாகத்தான் திருச்சியில் கம்பீரம் காட்டுகிறது, கார்கில் வெற்றிச்சின்னம்.. கார்கில் போரின் வெற்றி, இந்தியாவை மட்டுமல்ல. உலகம் முழுவதும் இந்தியர்கள் வசிக்கும் பகுதிகளையும் உணர்வுப்பூர்வமானதாக மாற்றியது.. பொதுமக்கள், வர்த்தக அமைப்புகள், திரையுலகினர் என பல்வேறு தரப்பிலிருந்தும், தாமாக முன்வந்து கார்கில் நிவாரண நிதியை சேகரித்து அரசுக்கு அனுப்பினர். கார்கில் வெற்றிக்குப் பிறகு, நாடு முழுவதும் புதிதாக உருவான பல குடியிருப்புகள், கார்கில் என்ற பெயரை பெருமையுடன் சுமக்கின்றன.

இந்தவகையில், கார்கில் போர் வெற்றி தினவிழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காஷ்மீர் செல்கிறார்.

கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் வீரவணக்கம் செலுத்துகிறார்.

இதனையொட்டி தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ”இன்றைய நாள் ஒவ்வொரு இந்தியருக்கும் மிகவும் சிறப்பான நாள். தேசத்தை காக்கும் அனைவருக்கும் வாழ்த்தும், உயிர்நீத்தவர்களுக்கு எனது இரங்கலும் தெரிவிக்க வேண்டும். “ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com