இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், மாரடைப்பு காரணமாக கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று, டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்டு இருக்கும் அடைப்பை நீக்க ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இச்சிகிச்சை முடிந்தபின் கபில் தேவ், 1983 உலகக் கோப்பையில் விளையாடிய இந்திய அணிக் குழுவினரின் வாட்ஸ்-அப் குரூப்பில் உரையாடினார். அதனையடுத்து கபில்தேவ் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக கையை உயர்த்திக்காட்டி புன்னகைக்கும் புகைப்படம் வெளியானது.
இதையடுத்து உடல் நிலை சீராக இயங்கத் தொடங்கியதைத் தொடர்ந்து கடந்த 25-ம் தேதி கபில்தேவ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில் கபில்தேவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஊதா நிற சட்டை அணிந்திருந்த கபில், 1983 அணியினருடன் அந்த வீடியோவை பகிர்ந்து கொண்டார்.
“எனது குடும்பம் 83. அருமையான வானிலை. உங்கள் அனைவரையும் சந்திக்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். நாங்கள் அனைவரும் விரைவில் சந்திப்போம் என்று நான் நம்புகிறேன். உங்கள் விருப்பத்திற்கும் அக்கறைக்கும் அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்முறையாக உலகக் கோப்பையை (1983) வென்றுத் தந்த தலைசிறந்த கேப்டன் கபில்தேவ். ஆல்-ரவுண்டராக திகழ்ந்த கபில்தேவ் இந்திய அணிக்காக 131 டெஸ்டுகள், 225 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 1994-ல் கடைசியாக விளையாடினார்.
டெஸ்ட் போட்டியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரன்களும், 400-க்கும் அதிகமான விக்கெட்டுகளும் ஒருசேர எடுத்த ஒரே வீரர் கபில்தேவ் ஆவார்.