ரசிகர் கொலை வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட தர்ஷன், கைதிகளுக்கான கட்டுப்பாடுகளை உடைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததன் சான்றாக புகைப்படம் வெளியானது. வீடியோ கால் பேசும் காட்சிகளும் வெளியாகின. இந்த வழக்கில், சிறை அதிகாரிகள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சிறை விதிகள் தகர்க்கப்பட்டது பற்றி, தனித்தனியே 3 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
இவற்றை விசாரிக்க, பேகூர் - ஹூளிமாவு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான 3 தனிப்படையினர், தர்ஷனிடம் 2ஆம் நாளாக நடத்திய விசாரணை, 8 மணி நேரம் நீடித்தது. சிறை வளாக புல்வெளியில் நாற்காலி போட்டது யார், அவருக்கு காபி - சிகரெட் - இணைய வசதியுடன் அலைபேசி ஆகியவற்றை கொடுத்தது யார் என கேள்விகளை முன்வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் ஒத்திகை நடத்தி வீடியோ பதிவும் செய்தனர். விசாரணையில், வில்சன் கார்டன் நாகா என்ற கைதிதான், வசதிகளை செய்து கொடுத்தது என தெரியவந்தது.
கொலைக்குற்றவாளிகளான பேக்கரி ரகு, வில்சன் கார்டன் நாகா ஆகியோர், போட்டி போட்டுக் கொண்டு பணிவிடை செய்துள்ளனர். முதல் 10 நாள்கள் ரகு பணிவிடை செய்த நிலையில், ஒருகட்டத்தில் நாகா முந்திக் கொண்டதால், நாகாவும் தர்ஷனும் இருக்கும் புகைப்படம் வெளியானது தெரியவந்துள்ளது. தர்ஷன் பயன்படுத்திய அலைபேசி யாருடையது, அவரை படம்பிடித்தது யார் என தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, தர்ஷன் பெங்களூரு சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பெல்லாரி சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இவ்வழக்கில் கைதான மற்ற நபர்களும், தார்வாட், தும்கூரு, விஜயபுரா, பெலகாவி உள்ளிட்ட பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். தர்ஷனின் தோழி பவித்ரா கவுடா உட்பட 3 பேர் மட்டும் பெங்களூரு சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர்.