சீக்கியர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், நடிகை கங்கனா ரனாவத்துக்கு டெல்லி சட்டமன்றத்தின் ‘அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான குழு’ சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, டிசம்பர் 6-ஆம் தேதிக்குள் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடிகை கங்கனா ரனாவத், சீக்கியர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக சமீபத்தில் சர்ச்சையொன்று எழுந்திருந்தது. சீக்கியர்கள் குறித்து கங்கனா ரனாவத் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தினரையும் காலிஸ்தானி பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அந்த பயங்கரவாதிகளை தனது ஷூவின் கீழ் கொசுக்களைப் போல நசுக்கியதாக குறிப்பிட்டிருந்தார். அப்பதிவில் அவர் ‘நாட்டின் ஒரே ஒரு பெண் பிரதமர் (இந்திரா) அவர்களைத் தனது காலணியில் போட்டு நசுக்கினார். அவர் (இந்திரா) இந்த தேசத்திற்கு எவ்வளவு துன்பம் கொடுத்து இருந்தாலும், தன் உயிரைப் பணயம் வைத்து அவர்களை கொசுக்களைப் போல் நக்கினார். அவர் உயிரிழந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட இன்றும் அவரது பெயரைக் கேட்டால் அவர்கள் நடுங்குகிறார்கள். அவரைப் போன்ற ஒரு நபர் தான் இப்போது தேவை’ என பதிவிட்டு இருந்தார்.
இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ராகவ் சதா தலைமையிலான ‘அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான குழு’வுக்கு முன்பு கங்கனா டிசம்பர் 6-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீக்கியர்களை இழிவுப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட கங்கனாவுக்கு எதிராக ஏற்கனவே மும்பையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.