அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, நடிகை கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
கடந்த 2020-ம் ஆண்டு சினிமா பாடலாசிரியர் ஜாவித் அக்தர், பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்திற்கு எதிராக மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தொடர்ந்தார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தனது நற்பெயரை கெடுக்கும் வகையில்கங்கனா ரணாவத் அவதூறு பரப்பியதாக மனுவில் ஜாவித் அக்தர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி நடிகை கங்கனா ரணாவத் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த மாஜிஸ்திரேட் ஆர்ஆர் கான், விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரிய கங்கனா ரணாவத்தின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து மாஜிஸ்திரேட் ஆர்ஆர் கான் கூறுகையில், ''கங்கனா ரணாவத் ஒரு பிரபலமாக இருக்கலாம். ஆனால் இவ்வழக்கில் பொறுத்தவரையில் அவர் குற்றம் சாட்டப்பட்டவர். இதுவரை கங்கனா ரணாவத் இரண்டு முறை ஆஜராகி உள்ளார். ஆனால் இந்த இரண்டு முறையும் அவர் நீதிமன்றத்துடன் ஒத்துழைக்கும் நோக்கத்துடன் ஆஜராகவில்லை. எல்லா வாய்ப்புகளும் வழங்கப்பட்ட போதிலும் அவர் ஆஜராகவில்லை. கங்கனாவின் வழக்கறிஞர் அளித்த வாக்குமூலங்களை தவிர, அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு (கங்கனா ரணாவத்) நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டால், மூத்த குடிமகனான புகார்தாரர் (அக்தர்) கடுமையான பாரபட்சத்திற்கு ஆளாக நேரிடும், மேலும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இருக்காது. குற்றம் சாட்டப்பட்டவர் தனது ஜாமீன் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்'' என்று கூறினார்.
இதற்கு முன்னதாக, தனக்கு எதிரான மனு விசாரணையில் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக கங்கனா ரணாவத் குற்றம் சாட்டியதுடன், வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு மும்பை பெருநகர மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது. இதை எதிர்த்து செசன்சு கோர்ட்டில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 'திரையரங்கில் திரையின் பாதுகாப்புக்காக கம்பிவேலி' - எந்த படத்துக்கு இந்த பாதுகாப்பு?