உத்தரப் பிரதேசத்தின் இந்து சமாஜ் அமைப்புத் தலைவர் கமலேஷ் திவாரியை கொலை செய்த விவகாரத்தில், சந்தேகத்தின் அடிப்படையில் இரு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
லக்னோவில் கடந்த 18-ஆம் தேதி தனது அலுவலகத்தில் வைத்து கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக மூன்று பேரை உத்தரப்பிரதேச காவல் துறையினர் கைது செய்தனர். இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு ஸ்வீட் பாக்ஸும், அதன் ரசீதும் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த ஸ்வீட் பாக்ஸ் லோகோவின் அடையாளத்தை வைத்து அது குஜராத்தின் சூரத்தில் வாங்கப்பட்டது என்பதை தெரிந்து கொண்ட காவல்துறை தனிப்படை அங்கு சென்றது. ஸ்வீட் கடையைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த தனிப்படையினர், அதில் அஸ்ஃபக் ஷேக் மற்றும் மொய்னுதீன் பதான் ஆகியோர் ஸ்வீட் வாங்கிய காட்சியை கண்டுபிடித்தனர். இதையடுத்து சூரத்தில் பதுங்கியிருந்த அவர்களை, குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.