நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே பிரதமர் இன்றுதான் வருகிறார் என மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவால் அன்றாட கூலித் தொழிலாளர்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து, இன்று காலை 9 மணிக்கு மீண்டும் காணொளி மூலம் மக்களிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ளப்போவதாக நேற்று அறிவித்தார். அதன்படி இன்று பேசிய மோடி, “ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி. இந்திய மக்கள் ஊரடங்கிற்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறார்கள். நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களைக் குறித்துச் சிந்தியுங்கள். அல்லது செல்போன் மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மோடியின் பேச்சு குறித்து சமூக வலைத்தளங்களில் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், “பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாட்டுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.