2.60 கோடி வாக்காளர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 43 தொகுதிகளில் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 68% வாக்குகளும், 38 தொகுதிகளில் நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 66% வாக்குகளும் பதிவாகின. கடந்த 2000ம் ஆண்டில் ஜார்க்கண்ட் உருவானதில் இருந்து நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தல்களில் அதிகபட்ச வாக்குப்பதிவு இந்த வருடம்தான் பதிவாகின.
இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆரம்பத்தில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்தது. ஆனால் தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + காங்கிரஸின் I-N-D-I-A கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
1,211 வேட்பாளர்களை கொண்ட ஜார்க்கண்ட் தேர்தல் களத்தில், தற்போதைய (மதியம் 1.30 நிலவரப்படி),
ஜேஎம்எம் கூட்டணி - 51 இடங்களிலும்,
பாஜக கூட்டணி -29 இடங்களிலும்,
பிற 1 இடத்திலு
முன்னிலை வகித்து வருகின்றன.
ஒருபுறம் ஜேஎம்எம் கூட்டணி முன்னிலை வகித்து வந்தாலும், ஜேஎம்எம் கட்சி சார்பில் கண்டே தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் 39,727 வாக்குகளை பெற்று, 3,060 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து இருக்கிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட முனியா தேவி 42,787 பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
முன்னதாக கடந்த முறை கண்டே தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற கல்பனா சோரன் தற்போதுதான் முதன்முறையாக முழு தேர்தல் களம் இறங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டே தொகுதி என்பது பொதுத்தொகுதியாகும். கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பழங்குடியின வாக்காளர்கள் 20.23 சதவீதமும், தாழ்த்தப்பட்ட சமூக வாக்காளர்கள் 11.35 சதவீதமும், இஸ்லாமிய சமூக வாக்காளர்கள் 26.8 சதவீதமும் இருக்கிறது.
இந்நிலையில் Barhait தொகுதியில் களம் கண்டிருக்கும் ஜேஎம்எம் சார்ப்பில் போட்டியிட்ட ஹேமந்த் சோரன் 17,347 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
ஜேஎம்எம் ஹேமந்த் சோரன் 32,484 வாக்குகளும், கம்லியேல் ஹெம்ப்ரோம் 15,137 வாக்களும் பெற்றுள்ளன நிலையில், பாஜக அம்மாநிலத்தில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது.