கேரள திரைப்பட நடிகர் கலாபவன் மணி கடுமையான கல்லீரல் நோய் பாதிப்பால்தான் உயிரிழந்ததாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 21016-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி, பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி கிடந்தார். அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அன்றே காலமானார்.
கலாபவன் மணி இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், பிரேத பரிசோதனையில் மணியின் உடலில் மெத்தில் மற்றும் எத்தில் ஆல்கஹால் இருந்ததும், க்ளோரோபைரபோஸ் என்ற கிருமிநாசினி இருந்ததாகவும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐதாராபாத்தில் உள்ள மத்திய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் முடிவுகள் வேறுமாதிரியாக இருந்ததால் குழப்பம் நீடித்தது.
2017-ல் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன், மனைவி நிம்மி ஆகியோர் தொடர்ந்த வழக்குகளின் அடிப்படையில் கலாபவன் மணியின் மரண வழக்கை சிபிஐ., விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மணியின் உடலை ஆய்வு செய்து வழங்கிய 32 பக்க அறிக்கையை கொச்சி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்துள்ளது. அதில் கலாபவன் மணி, கடுமையான கல்லீரல் பாதிப்புக்குள்ளாகி இருந்ததால் மரணமடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து கலாபவன் மணியின் மரணத்தில் எழுந்த பல்வேறு சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.