டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தெலங்கானா முதலமைச்சர் மகள் கவிதா, இரண்டாவது முறையாக இன்று மீண்டும் ஆஜராகிறார்.
டெல்லியில் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தனித்தனியே விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கின் முக்கிய புள்ளியாக கருதப்படும் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சரும், கலால் துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்ற பத்திரிகையில் தெலங்கானா முதலமைச்சரின் மகள் கவிதா, தொழிலதிபர்கள் சரத் ரெட்டி மற்றும் சீனிவாசலு ரெட்டி உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள "சவுத் குரூப்" நிறுவனத்திடம் இருந்து சில நபர்கள் மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு சுமார் 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து விசாரணை வளையத்திற்குள் கவிதா கொண்டுவரப்பட்டார்.
இதுபோல் சிபிஐ தரப்பிலும் கவிதா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி ஐதராபாத்தில் கவிதா இல்லத்தில் சுமார் 7 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை டெல்லி ஏ.பி.ஜே அப்துல்கலாம் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான கவிதாவிடம் சுமார் 8 மணி நேரங்களுக்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் 2-ம் கட்ட விசாரணைக்கு கவிதா ஆஜாராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் கவிதா தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்ததால் இன்று அவர் ஆஜராகவுள்ளார். இதனால், அமலாக்கத்துறை மற்றும் டெல்லியில் உள்ள கவிதாவின் இல்லத்திற்கு வெளியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.