பாரதிய ஜனதாவுக்கு எதிராக வலுவான மாற்று அணி அமைப்பது தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை விரைவில் சந்திக்க உள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் பேசிய தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், விரைவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். உத்தவ் தாக்கரேவை சந்திப்பதற்காக விரைவில் மும்பை செல்ல உள்ளதாக சந்திரசேகர் ராவ் தெரிவித்தார். மேலும் மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் பேசியதாகவும், இதைத் தொடர்ந்து நேரில் சந்தித்து விரிவாக பேச முடிவெடுத்துள்ளதாகவும் சந்திரசேகர ராவ் தெரிவித்தார். மம்தா பானர்ஜி தன்னை சந்திக்க ஹைதராபாத் வரக்கூடும் அல்லது அவரை சந்திக்கத்தான் கொல்கத்தா செல்லக்கூடும் என்றும் சந்திரசேகர் ராவ் கூறினார்.
பாஜகவுக்கு எதிராக அமையும் அணிக்கு தலைமை வகிப்பீர்களா என்ற கேள்விக்கு சந்திரசேகர் ராவ் நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டார். எனினும் எதிரணி உருவாக்கத்தில் முக்கியப்பங்கு வகிக்கப்போவது உறுதி என்றும் தெலங்கானா முதலமைச்சர் தெரிவித்தார். முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் பேசியிருந்தார். அப்போது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தை நடத்துவது குறித்து மம்தா பேசியதாகவும் ஸ்டாலின் கூறியிருந்தார்.