டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை நடந்த பதவியேற்பு நிகழ்வில் உச்சநீதிமன்றத்தின் 51 ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக சஞ்சீவ் கன்னாவை இந்த பதவிக்கு, தற்போது ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியான சந்திரசூட்தான் பரிந்துரைத்திருந்தார். அந்த பரிந்துரையை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டது.
இன்று காலை 10 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் மே 13, 2025 வரை இருக்கிறது குறிப்பிடத்தக்கது. அதாவது அடுத்த 6 மாத காலத்துக்கு இவர் இப்பதவியில் இருப்பார்.
சஞ்சீவ் கன்னா உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது காஷ்மீரின் இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவை நீக்குவதை உறுதி செய்த அரசியலமைப்பு அமர்வில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் தொடர்புடைய டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உட்பட பல முக்கிய தீர்ப்புகளில் இவரின் பங்கு இன்றியமையாதது.
டெல்லியில் 1960ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி பிறந்த இவர், அங்குள்ள பல்கலையிலேயே சட்டம் பயின்றார்.
இவரது தந்தை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக 1985ஆம் ஆண்டுவரை பதவி வகித்தவர்.
1983ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துகொண்ட சஞ்சீவ் கன்னா, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
2004ஆம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராக (சிவில்) நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக கடந்த 2005ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி, உச்சநீதிமன்ற நீதிபதியாக இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.