நீதிமன்றத்தில் இருந்து மாநிலங்களவை : இன்று பதவியேற்கும் ரஞ்சன் கோகாய்!

நீதிமன்றத்தில் இருந்து மாநிலங்களவை : இன்று பதவியேற்கும் ரஞ்சன் கோகாய்!
நீதிமன்றத்தில் இருந்து மாநிலங்களவை : இன்று பதவியேற்கும் ரஞ்சன் கோகாய்!
Published on
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்கிறார். 
நீதித்துறையில் இருந்து நேரடி அரசியலுக்குள் நுழைந்துள்ள ரஞ்சன் கோகாய்,‌ அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட‌வர். 1978ஆம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கிய அவர், கவுகாத்தி உ‌‌யர்நீதிமன்ற நிரந்தர நீதிபதி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை‌‌ நீதிபதி என படிப்படியாக வளர்ந்து, உச்சநீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியானார். கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற அவருக்கு தற்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. 
ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு பெரும்பாலும் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் போன்ற கௌரவ பதவிகள் அல்லது ஏதேனும் ஒரு கமிஷனுக்கு தலைமை வகிப்பது போன்ற பொறுப்புகள் வழங்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகின்றது. ஆனால், ஓய்வு பெற்ற 4 மாதங்களிலேயே ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகளே அதிருப்தி தெரிவித்துள்ளனர். 
ரஞ்சன் கோகாயின் மாநிலங்களவை உறுப்பினர் நி‌யமனம் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருப்பதாக முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் விமர்சித்திருக்கிறார். தமது 40 ஆண்டு கால நீதித்துறை வாழ்க்கையில் ரஞ்சன் கோகாய் போன்று ஒரு நபரை சந்தித்ததில்லை என முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடுமையாகச் சாடியுள்ளார்.
அதேபோல் ஏ.பி.ஷா, யஷ்வந்த் சின்ஹா, துஷ்யந்த் தவே போன்ற முன்னாள் நீதிபதிகளும் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களின் கடுமையாக விமர்சனங்களுக்கு ரஞ்சன் கோகாயின் செயல்பாடுகளும் பல முக்கிய வழக்குகளை அவர் கையாண்ட விதமும் காரணங்களா‌க கருதப்படுகின்றன. 
நாட்டு மக்கள் அனைவராலும் உற்றுநோக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் வழக்கு, ரஃபேல் வழக்கு போன்றவற்றில் ரஞ்சன் கோகாய் வழங்கிய தீர்ப்புகளில் உள்நோக்கம் இருப்பதை அவரது புதிய பதவி வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம், பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியோடு தொடர்புப்படுத்தி பேசப்படுகிறது. இவ்வாறு சக நீதிபதிகளின் குற்றச்சாட்டுகள் அனைத்திற்குமான விளக்கத்தை மாநிலங்களவை உறுப்பினரான பிறகு அளிப்பதாக ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com