இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதி ஒருவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆக நியமிக்கப்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதி இடங்கள் காலியகியுள்ளதை அடுத்து, நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒன்பது பெயர்களை பரிந்துரைத்துள்ளது. இந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவரான நீதிபதி பிவி நாகரத்னா, தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். இவரது பெயரை மத்திய அரசு தேர்வு செய்யும் பட்சத்தில், 2027 ஆம் ஆண்டில் இந்திய வரலாற்றில் முதல் பெண் தலைமை நீதிபதியாக (சிஜேஐ) வர உள்ளார்.
இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணா மற்றும் நீதிபதிகள் யுயூ லலித், ஏஎம் கான்வில்கர், டிஒய் சந்திரசூட், எல் நாகேஸ்வர ராவ் உள்ளிட்ட ஐந்து பேர் கொலீஜியம் உறுப்பினர்களாக உள்ளனர். 2 ஆண்டு தாமத்திற்கு பிறகு கொலிஜியம் தற்போது ஒன்பது நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொலிஜியம் பரிந்துரைத்த 9 நீதிபதிகளின் பெயர்கள் உள்ளன:
1) நீதிபதி ஹிமா கோலி: தெலுங்கானாவின் தலைமை நீதிபதி
2) நீதிபதி பிவி நாகரத்னா: கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி
3) நீதிபதி பெலா திரிவேதி: குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி
4) மூத்த வழக்கறிஞர் பிஎஸ் நரசிம்மா: பார் கவுன்சிலில் இருந்து நேரடி நியமனம்
5) நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா: கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
6) நீதிபதி விக்ரம் நாத்: குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
7) நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி: சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
8) நீதிபதி சி.டி.ரவிக்குமார்: கேரள உயர் நீதிமன்ற நீதிபதி
9) நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
ஆகஸ்ட் 12 அன்று நீதிபதி ஆர்எஃப் நாரிமன் ஓய்வு பெற்ற பிறகு, உச்சநீதிமன்றத்தில் காலியிடங்கள் 9ஆக அதிகரித்தது, இதனால் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆகக் குறைந்துள்ளது. இந்த பரிந்துரைகள், ஏற்றுக்கொள்ளப்பட்டால், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயரும்.