'கீழமை நீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் வழங்க பயப்படுகிறார்கள்' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த 9ஆம் தேதி டி.ஒய் சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் இந்திய பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் சந்திரசூட் கலந்துகொண்டார்.
இவ்விழாவில் பேசிய அவர், "நீதித்துறையில் ஆணாதிக்கம், சாதிய ரீதியான கட்டமைப்பு தொடர்ந்து வருகிறது. இது மாற வேண்டும். எனவே, மூத்த வழக்கறிஞர்கள் தங்கள் ஜூனியர்களை பலதரப்பட்ட பின்புலத்திலிருந்து தேர்வு செய்ய வேண்டும். நீதித்துறையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்து விவாதம் எழுந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது நீதித்துறையில் தற்போது பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. அதேவேளையில், பெண்கள் மட்டுமல்லாது ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சம வாய்ப்பை வழங்குவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், நீதித்துறையின் மீதான நம்பிக்கையை நாம் காப்பாற்ற வேண்டும். குறிப்பாக மாவட்ட நீதிபதிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட நீதிபதிகள் உறுதியுடன் செயல்படாத காரணத்தால் உயர் நீதிமன்றங்களுக்கு அழுத்தம் அதிகரிக்கிறது. உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரும் மனுக்கள் நிலுவையில் குவிந்துள்ளன. இதற்குக் காரணம் கீழமை நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க தயங்குவதுதான். அவர்கள் குற்றத்தின் தன்மையை உணர்வதால், நாம் குறி வைக்கப்படுவோமோ என பின்விளைவுகளுக்கு பயந்து ஜாமீன் தர மறுக்கிறார்கள். இந்த பயத்தை குறித்து நாம் பேச மறுக்கிறோம்" என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.