2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஏறத்தாழ ஆறாண்டு விசாரணைக்குப் பிறகு, வரும் ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2ஜி முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணை கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்து இன்று தெரிவிக்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்திருந்தார். இன்று அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் தீர்ப்பு வழங்க மேலும் சிறிது காலம் தேவைப்படுவதாகக் கூறிய நீதிபதி ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி அல்லது அதிலிருந்து பத்து நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். 2ஜி அலைகற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடைபெற்ற முறைகேட்டில் அரசுக்கு சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி, முன்னாள் தொலைத்தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பெகுரா, உள்ளிட்ட 14 தனிநபர்கள் மீதும், மூன்று நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்கு தொடர்ந்திருந்தது.