நீதிமன்றங்களில் நீதிபதிகளை மை லார்டு என உயர்வாக அழைக்கும் போக்கு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. அடிமைத்தனத்தின் அடையாளங்களில் ஒன்றாக பார்க்கப்படும் இவ்வார்த்தையை பல நீதிபதிகள் விரும்பாவிட்டாலும் அவ்வாறு கூறி அழைக்கும் போக்கு தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் நீதிபதி பி.எஸ்.நரசிம்மாவை பல முறை “மை லார்டு” என அழைத்துள்ளார். மூத்த தலைமை நீதிபதி ஏ.எஸ். போபண்ணாவுடன் பெஞ்சில் அமர்ந்திருந்த பி.எஸ்.நரசிம்மா இதனால் தர்மசங்கடம் அடைந்து, “எத்தனை முறைதான் மை லார்டு என அழைப்பீர்கள்?” என நொந்துகொண்டார்.
தன்னை சார் என சாதாரணமாக அழைத்தாலே போதும் என கூறிய நீதிபதி, மை லார்டு என அழைப்பதை நிறுத்திக்கொண்டால் தனது ஊதியத்தில் பாதியை தந்து விடுவதாகவும் நகைச்சுவையாக குறிப்பிட்டார். மேலும், மை லார்டு என எத்தனை முறை கூறுகிறார் என எண்ணத் தொடங்குவேன் என்றும் தெரிவித்தார்.
நீதிபதிகளை மை லார்டு அல்லது யுவர் லார்ட்ஷிப் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என 2006ஆம் ஆண்டே பார் கவுன்சில் தீர்மானம் இயற்றியும் அது வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது.
ஆனால் 2013 ஆம் ஆண்டு நீதிமன்றங்களில் மை லார்ட் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை தடை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர் தாக்கல் செய்திருந்த அந்த பொது நல வழக்கில், “மை லார்ட், யுவர் லார்ட்ஷிப்ஸ் போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும், இது இந்திய நாட்டின் கண்ணியத்திற்கு எதிரானது” என்றும் கூறப்பட்டிருந்தது.
ஒரு வருடம் கழித்து, உச்சநீதிமன்றம் “நீதிமன்றங்களில் நீதிபதிகளை மை லார்ட், மை லார்ட்ஷிப்ஸ் என அழைப்பது கட்டாயமில்லை” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.