டெல்லியின் புதிய முதலமைச்சர்.. 14 துறைகள் கைவசம் இருக்கும் ஒரே பெண் அமைச்சர்! யார் இந்த அதிஷி?

டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், டெல்லியின் தற்போதைய நிதியமைச்சர் அதிஷி சிங். யார் இந்த அதிஷி? சுருக்கமாக பார்க்கலாம்.
டெல்லியின் புதிய முதலமைச்சர்
டெல்லியின் புதிய முதலமைச்சர்முகநூல்
Published on

டெல்லி மாநில அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருப்பவர் அதிஷி சிங். டெல்லி அமைச்சரவையில் அதிக துறைகளை வைத்திருக்கும் அமைச்சர் யாரென்றால், அது அதிஷிதான். அம்மாநில அமைச்சரவையில் உள்ள ஒரே பெண் அமைச்சராகவும், ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.

2018ஆம் ஆண்டு வரை மனிஷ் சிசோடியா கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது ஆலோசகராக செயல்பட்ட அதிஷி டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளின் கல்விமுறை மாற்றத்தில் முக்கிய பங்காற்றினர்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்று பாடம் பயின்ற அதிஷி பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றார். பின்னர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்ததுவிட்டு, தொடர்ந்து அங்கேயே கல்வி ஆராய்ச்சியில் மற்றும் ஒரு முதுநிலை பட்டத்தையும் பெற்றார்.

டெல்லியின் புதிய முதலமைச்சர்
'டெல்லி அமைச்சரவையில் உள்ள ஒரே பெண் அமைச்சர்'... புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் அதிஷி!

கல்வியில் சிறந்து விளங்கிய அதிஷி மத்திய பிரதேசத்தில் ஒரு சிறிய கிராமத்தில் 7 ஆண்டுகள் சேவையாற்றியிருக்கிறார். அங்கு இயற்கை விவசாயத்தில் பங்கேற்ற அவர், பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கல்வியை முன்னேற்றுவதற்கான பல்வேறு முனைப்புகளில் தனது பங்களிப்பை அளித்துள்ளார்.

ஆந்திர பிரதேசத்தில் ஒரு பள்ளியில் சிறிது காலம் அவர் வரலாறு மற்றும் ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்ட போதே அதில் தன்னை இணைத்துக்கொண்டவர்.

2013 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவில் உறுப்பினராக செயல்பட்டதன் மூலம் கட்சியின் கொள்கைகளை வடிவமைத்த முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

2019ஆம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மியின் சார்பில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் அதிஷி சிங்.

தொடர்ந்து, 2020 டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் தெற்கு டெல்லியின் கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட இவர், 11,422 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தரம்பீர் சிங்கை தோற்கடித்தார். அதற்குப் பிறகு அமைந்த அர்விந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவையில், திட்டம், பொதுப்பணித்துறை, தண்ணீர், மின்சாரம் உட்பட 14 துறைகளுக்கு அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்த காலகட்டத்தில், டெல்லி மாநில ஆட்சி நிர்வாகத்தைக் கவனித்தவர். கடந்த 2022ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் டெல்லி நகர்புற ஆளுமை குறித்து உரையாற்றினார்.

மேலும், தம்மை கட்சியில் சேரும்படி பாரதிய ஜனதா அழுத்தம் தந்ததாகவும், அவ்வாறு கட்சி மாறாவிட்டால் மற்ற ஆம் ஆத்மி தலைவர்களைப் போல் தானும் கைது செய்யப்படுவேன் என மிரட்டப்பட்டதாகவும் அன்மையில் தெரிவித்திருந்தார்.

டெல்லியின் புதிய முதலமைச்சர்
ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள 24 தொகுதிகளில் ஓய்ந்தது தேர்தல் பரப்புரை!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு பின்னர் பல விவாதங்களிலும் ஆத் ஆத்மி கட்சியின் முகமாக தோன்றி வலுவான வாதங்களை முன்வைத்ததன் மூலம் அதிஷி அனைவருக்கும் அறிமுகமானவராக இருக்கிறார். இவரே, தற்போது டெல்லியின் புதிய முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com