பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இந்த கருத்தை ஐ.நா. தெரிவித்துள்ளது.
செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் அல்ட் நியூஸ் எனப்படும் இணையதள செய்தி நிறுவனத்தில் இணை நிறுவனராக பதவி வகிப்பவர் முகமது ஜுபைர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வலதுசாரி அமைப்புகளால் பரப்பபட்ட செய்தியை போலியானது என உறுதி செய்தார். அதனை ட்விட்டரிலும் பதிவிட்டார். இந்த பதிவானது வன்முறையை தூண்டும் விதமாகவும், மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் இருந்ததாக கூறி கடந்த திங்கள்கிழமை அவரை அகமதாபாத் போலீஸார் கைது செய்தனர்.
இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானி டுஜாரிக்கிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஸ்டெஃபானி, "உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். குறிப்பாக, பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தை தடுக்கக் கூடாது. அவர்கள் மீது அடக்குமுறைகளை பயன்படுத்தி அச்சுறுத்தக் கூடாது" எனக் கூறினார்.