பாஜக சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூட்டத்தில் பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் பாஜக சார்பில் மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக தோல்வியை கண்டது. தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய்வதற்காக இக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக நிர்வாகிகளுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பு வந்துள்ளது. அப்போது அதனை வீடியோவாக பதிவு செய்த பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தாக்குதலுக்கு ஆளான பத்திரிகையாளர் சுமன் பாண்டே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக சுமன் பாண்டே தனது புகார் மனுவில், “ ராய்பூர் மாவட்ட கூட்டத்தில் பாஜக நிர்வாகிகளுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. நான் என் மொபைலில் வீடியோ எடுப்பதை நிறுத்தாமல் தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது ராய்பூர் மாவட்ட பாஜக தலைவர் ராஜீவ் அகர்வால் மற்றும் சிலர் என்னருகே வந்து பதிவு செய்த வீடியோவை டெலிட் செய்யுமாறு அறிவுறுத்தினர். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். உடனடியாக என்னை தாக்கியதோடு, கட்டாயப்படுத்தி அந்த வீடியோவை டெலிட் செய்தனர்” எனக் கூறியுள்ளார். தாக்குதலில் சுமன் பாண்டேவிற்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து அறிந்தவுடன் பத்திரிகையாளர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருப்பினும் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.