அனைத்துக் கட்சிகளும் வளர்ச்சி என்ற ஒற்றை வார்த்தையையே கையில் எடுத்து தேர்தல்களை சந்தித்தாலும் வெற்றி என்பது எப்போதும் ஒரு கட்சிக்கே கிடைப்பதில்லை. வெற்றியை தீர்மானிப்பது வளர்ச்சி மட்டுமே இல்லை என்கிறார் பத்திரிகையாளர் ஏகலைவன்.
”வளர்ச்சி என்று சொல்லும்போது ஆம் ஆத்மி டெல்லியை பிரதான படுத்திப் பேசுகின்றனர். ஆனால் இந்தியாவுக்கே கல்வியின் முக்கியத்துவத்தை வெளிச்சமிட்டு காட்டியவர் காமராஜர். இங்கிருந்துதான் கல்வியானது அனைவருக்குமானது, கட்டணமில்லாதது என்பதை மிகப்பெரிய அளவில் பரப்பியவர் காமராஜர். இதைத்தான் ஆம் ஆத்மி முன்னெடுத்துள்ளது. தமிழ்நாட்டிலும் அதற்கான முயற்சிகள் நடந்துவருகிறது.
பாஜக கட்சி வளர்ச்சியை கொடுத்து இருந்தால் காங்கிரஸ் இமாச்சல பிரதேசத்தில் வெற்றிபெற்றிருக்க வாய்ப்பில்லை. அதேபோல் ஏற்கெனவே டெல்லியில் வளர்ச்சியை கொடுத்த பாஜக கட்சி எப்படி அங்கு வீழ்ந்தது? என்பதுபோன்ற கேள்விகள் நமக்கு எழுகின்றன. இதனால் வளர்ச்சி மட்டுமே இல்லாமல் வெற்றிக்கு வேறு வேறு காரணங்களும் இருக்கின்றன.
உதாரணத்திற்கு, இந்துத்துவாவின் முகம் பாஜக என்பது நாக்பூரை மையமாக கொண்டிருந்தது. ’இனி எல்லா பாதைகளும் ரோம் நகரை நோக்கி’என்பதைப்போல், ‘குஜராத்தை நோக்கி’ என்கிற கட்டமைப்பை கொண்டுவருவதே மோடி - அமித் ஷாவின் நோக்கம்.
டெல்லி மற்றும் இமாச்சல பிரதேசத்தில் விழுந்ததைப் பற்றி பாஜக கவலைப்படவில்லை. ஆனால் குஜராத் வெற்றியை மிகப்பெரிய அளவில் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் குஜராத்தை மையமாக வைத்து இந்திய அரசியலை முன்னெடுக்கும் போக்கு காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் குஜராத்தில்தான் பணியாட்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகமாக இருக்கிறது. அங்கிருந்துதான் வருங்காலத்தில் இந்தியா முழுவதுக்குமான பொருளாதார கட்டமைப்பு இருக்கவேண்டும் என்ற முனைப்பை நோக்கிதான் மோடி அரசு நகர்கிறது.
அதனால் எந்த விதத்திலும் குஜராத் வீழ்ந்துவிடக்கூடாது என்பதை கருத்தில்கொண்டு அனைத்து கிராமப்புறங்களிலும் பாஜக இறங்கி வேலை செய்துகொண்டிருக்கிறது. குறிப்பாக காங்கிரஸை கொஞ்சம் கொஞ்சமாக தங்களை நோக்கி நகர்த்தி வரவைத்துள்ளனர். கட்சியில் உண்மையிலேயே வளர்ச்சி இருந்திருந்தால் இந்த வேலையை பாஜக செய்திருக்க வேண்டிய அவசியமில்லை.
மற்றொரு புறம் வளர்ச்சி என்று மட்டுமே பார்த்தால், சுந்தரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் முடிந்த அளவு வளர்ச்சி என்பது மறுக்கமுடியாது. காஷ்மீர் - கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலை, தொலைபேசி போன்ற அனைத்துமே காங்கிரஸ் ஆட்சிகாலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்தியதில் வேண்டுமானால் பாஜகவின் பங்கு இருக்கலாம். நாட்டின் வளர்ச்சிக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்களின் அடிப்படையில் காங்கிரஸின் பங்களிப்பு கட்டாயம் இருக்கிறது.
அப்படி வளர்ச்சி மட்டுமே கொடுத்திருந்தால் காங்கிரஸ் ஆட்சியைவிட்டு நகர்ந்திருக்கக்கூடாது. ஆனால் இது எப்படி நடந்தது என்று பார்க்கும்போது வளர்ச்சியைத் தாண்டிய அதிகாரம், பணம் போன்றவை தேர்தல்களத்திற்குள் நகர்ந்துகொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.