ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் நில அபகரிப்பு தொடா்பான பண முறைகேடு வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஹேமந்த் சோரன் முதல்வா் பதவியிலிருந்து விலகியதையடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவா் சம்பாய் சோரன் முதல்வராகப் பதவியேற்றாா். பின்னர், ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைக்கப் பெற்றதை அடுத்து, கடந்த ஜூன் மாதம் மீண்டும் முதல்வா் பதவியை ஏற்றார்.
இதனால் சம்பாய் சோரனிடம் இருந்து பதவி பறிபோனது. இதனால் அதிருப்தியில் இருந்த சம்பாய் சோரன், அப்போது நடந்த சில சம்பவங்கள், விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது ஜார்க்கண்ட் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முதன்மை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சம்பாய் சோரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர், பாஜகவில் இணையவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். முன்னதாக டெல்லியில் சில தினங்களாக முகாமிட்டிருந்த சம்பாய் சோரன், பாஜக மூத்த தலைவர்களை நேரில்போய்ச் சந்தித்திருந்தார்.
இதையும் படிக்க: சத்ரபதி சிவாஜி சிலை கீழே விழுந்த விவகாரம்| மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!
இந்த நிலையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் இன்று (ஆக.30) பாஜகவில் இணைந்தார். ராஞ்சியில் சிவராஜ் சிங் சௌஹான், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் அவா் இன்று தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.
அக்கட்சியில் இணைந்தது குறித்து சம்பாய் சோரன், ”நான் அவமானப்படுத்தப்பட்டேன். அதனால்தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தேன். இருப்பினும், ஜார்க்கண்ட் மக்களின் அன்பு மற்றும் ஆதரவின் காரணமாக, நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதில்லை என முடிவு செய்தேன். நான் ஒரு புதிய கட்சியை தொடங்குவேன் அல்லது வேறு கட்சியில் சேருவேன் என்று நினைத்தேன். ஆனால் அசிங்கப்பட்ட அந்தக் கட்சியில் நான் ஒருபோதும் இருக்கமாட்டேன். பின்னர், ஜார்க்கண்ட் மக்களுக்கு தொடர்ந்து சேவைசெய்ய பாஜகவில் சேர முடிவு செய்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.
சம்பாய் சோரன் பாஜகவில் இணைந்தது அக்கட்சிக்கு வலிமையாகப் பார்க்கப்படுகிறது. ஜார்க்கண்ட்டில் அதிக எண்ணிக்கையில் உள்ள பழங்குடியின சமூகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக சம்பாய் அறியப்படுகிறார். இதனால் அச்சமூகத்தின் வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என பாஜக நினைக்கிறது. அச்சமூக வாக்குகள் மட்டும் 26% இருப்பதாகக் கூறப்படுகிறது. 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
68 வயதான சம்பாய் சோரன் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை சிமல் ஒரு விவசாயி. அவரது தாய் மாடோ இல்லத்தரசி. கொல்ஹான் பகுதியைச் சேர்ந்த இவர், +10ஆம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றவர். சம்பாய் சோரன் செரைகேலா (Seraikela) தொகுதியில் 1991-ஆம் ஆண்டு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி தனது அரசியல் வாழ்வை தொடங்கியவர்.
அதன்பின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்து அரசியலில் பணியாற்றியவர். 1995ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களில் 2000ஆம் ஆண்டில் நடந்த தேர்தலை தவிர அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.
இதுவரை ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு 7 முறை தேர்வு செய்யப்பட்டவர் சம்பாய் சோரன். 2010 ஆம் ஆண்டு அர்ஜுன் முண்டா தலைமையிலான பாஜக அரசின் அமைச்சரவையிலும் அமைச்சராக பணியாற்றியுள்ளார். ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் 2013 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை, பழங்குடியின மற்றும் பட்டியலின அமைச்சராகவும் பதவி வகித்து வந்தவர் சம்பாய் சோரன்.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவினை ஹேமந்த் சோரனின் தந்தை ஷுபு சோரன் தொடங்குகையில், அதன் ஆரம்பகால நிறுவன உறுப்பினர்களில் சம்பாய் சோரனும் ஒருவர். ஷிபு சோரனுக்கு மிக நெருக்கமாக இருந்தவர். பீகாரில் இருந்து தனி மாநிலமாக ஜார்க்கண்ட் பிரிய காரணமாக இருந்த போராளிகளில் ஒருவர் என்பதால் இவருக்கு 'ஜார்க்கண்ட் புலி' என்ற பட்டப்பெயரும் உண்டு.