வேலை இல்லாமல் சுற்றித் திரிகிறாயே என கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், உறவினர்கள் மூன்று பேரை குத்திக் கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக இளைஞர்களின் பெரும் கவலை வேலை கிடைப்பது. படித்த படிப்பிற்கு வேலை இல்லையே.. மாதச் செலவுக்கு கூட ஒரு வேலை இல்லையே என பரிதவிக்கும் இளைஞர்கள் ஏராளம். அப்படி வேலையில்லாத இளைஞர்களை, சீக்கிரம் வேலைக்கு போ என குடும்பத்தினரும் கண்டிப்பது உண்டு. இந்நிலையில் வேலையில்லாமல் வெட்டியாகவே சுற்றித் திரிகிறியே என கிண்டல் செய்தவர்களை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்த இளைஞர் சச்சின். பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவருக்கு எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் வேலையில்லாமல் சுற்றித் திரிந்துள்ளார். சச்சின் இப்படி வேலையில்லாமல் சுற்றித் திரிவதை அவரின் உறவினர் ஒருவர் கடுமையாக நக்கலடித்து பேசியதாக தெரிகிறது. இதனால் சச்சினுக்கு மிகுந்த ஆத்திரமும் கோபமும் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் கோபத்தில் இருந்த சச்சின், தனது உறவினர் என்றும் பாராமல் தன்னை கிண்டல் செய்தவர் வீட்டில் அவர் உள்பட மூன்று பேரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். ஷங்கர், மங்கல் கணேஷ் மற்றும் ரோகித் (வயது 4) ஆகியோரை சச்சின் கொலை செய்துள்ளார். இதுமட்டுமில்லாமல் 6 வயது சிறுவன் ஒருவரையும் சச்சின் கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். ஆனால் அந்த சிறுவன் சச்சின் இடமிருந்து தப்பிவிட்டார். இதனிடையே சச்சின் குடும்பத்திற்கும், அவர் கொலை செய்த உறவினர்கள் குடும்பத்திற்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடைய சச்சினை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்த சச்சின் மீது ஐபிசி 302, 307, 326 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.