இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு : தமிழகத்தின் நிலை என்ன ?
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய பொருளாதார சூழலை ஆய்வு செய்யும் சி.எம்.ஐ.இ (CMIE) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், சென்ற பிப்ரவரி மாதத்தில் வேலை வாய்ப்பின்மை 7.78 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற பிப்ரவரி மாதத்தில் வேலைவாய்ப்பின்மை நகர்ப்புறத்தில் 8.65 சதவிகிதமாகவும், கிராமப்புறத்தில் 7.37 சதவிகிதமாகவும் உள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை 8.10 சதவிகிதமாக இருந்த நிலையில், அடுத்து வந்த மாதங்களில் சற்று குறைந்தது. அதாவது, நவம்பர் மாதத்தில் வேலை வாய்ப்பின்மை 7.3 சதவிகிதமாகவும், டிசம்பர் மாதத்தில் 7.60 சதவிகிதமாகவும், ஜனவரி மாதத்தில் 7.16 சதவிகிதமாகவும் இருந்ததாக சி.எம்.ஐ.இ-ன் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் வேலைவாய்ப்பின்மை மீண்டும் அதிகரித்து 7.78 சதவிகிதமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் பிப்ரவரி மாதத்தில் வேலை வாய்ப்பின்மை குறித்த புள்ளி விவரங்களை சி.எம்.ஐ.இ வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் 28.4 சதவிகிதமும், ஹரியானா மாநிலத்தில் 25.8 சதவிகிதமும், ஜம்மு காஷ்மீரில் 22.2 சதவிகிதமும், ஹிமாச்சல் பிரதேசத்தில் 16.8 சதவிகிதமும் வேலை வாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளதாக சி.எம்.ஐ.இ-யின் ஆய்வில் தெரியவந்துள்ளது. தென் இந்தியாவைப் பொறுத்தவரை தெலங்கானாவில் 8.3 சதவிகிதமும், கேரளாவில் 7.6 சதவிகிதமும், ஆந்திராவில் 5.8 சதவிகிதமும், கர்நாடகாவில் 3.6 சதவிகிதமும் வேலைவாய்ப்பின்மை உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே புதுச்சேரி மற்றும் தமிழகத்தில்தான் மிகக் குறைந்த அளவில் வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற பிப்ரவரி மாதத்தில் புதுச்சேரியில் 1.8 சதவிகிதமும் தமிழகத்தில் 2.1 சதவிகிதம் அளவிற்கே வேலைவாய்ப்பின்மை இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.