மேற்கு வங்கம் மாநிலம் ஜார்க்ரம் அருகே கடந்த 2010ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு பெரும் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 148 பயணிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நிகழ்ந்து 13 ஆண்டுகள் ஆகியும், அதில் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழ் அவர்களின் உறவினர்களுக்கு இன்னும்கிடைக்காமல் இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவை சேர்ந்த பவுலோமி அட்டாவுக்கு, ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளான போது வயது 5 மட்டுமே. தனது மகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் செய்த அவருடைய தந்தை பிரசென்ஜித், அந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில் விபத்து நிகழ்ந்து 13 வருடங்கள் ஆகியும் தனது தந்தை பிரசென்ஜித்தின் இறப்பு சான்றிதழ் கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கிறார் பவுலோமி அட்டா.
ரயில்வே நிர்வாக பதிவுகளில் 'பிரசென்ஜித் காணவில்லை' என்றிருப்பதால் அவருக்கான இறப்பு சான்றிதழ் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பவுலோமி அட்டாவின் தாயார் ஜூத்திகாவும் காலமாகிவிட்டார். ஜூத்திகா உயிரோடிருக்கையில் தனது கணவரின் இறப்புச் சான்றிதழ் கோரி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய ரயில்வே அமைச்சர்கள், உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டிருக்கிறார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
இதுகுறித்து பவுலோமி அட்டா கூறுகையில், ''எங்கள் குடும்பத்தில் வேலைக்கு செல்லும் ஒரே நபரான என் தந்தையை இழந்துவிட்டேன். அவருக்கான இறப்புச் சான்றிதழை பெற அலைக்கழிக்கப்பட்ட என் அம்மாவும் இப்போது உயிரோடு இல்லை. தற்போது நான் தந்தையின் இறப்புச் சான்றிதழை பெற முயற்சித்து வருகிறேன்'' என்கிறார் அவர்.
தனது தந்தையின் இறப்பு சான்றிதழ் இல்லாததால் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் தவித்து வருகின்றார் பவுலோமி அட்டா, மேலும் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வேலை வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இறப்பு சான்றிதழ் இல்லாததால் அதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்கிறார் பவுலோமி. தனது தந்தையின் இறப்பு சான்றிதழ் கோரி பவுலோமி தொடர்ந்துள்ள வழக்கு ஜார்கிராமில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அதேபோல், கொல்கத்தாவைச் சேர்ந்த சுரேந்திர சிங் மற்றும் லிலுவாவைச் சேர்ந்த ராஜேஷ் குமார் போத்ரா ஆகியோரும் 2018இல் நீதிமன்றத்தை அணுகினர். இருவருமே ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் தங்களுடைய மனைவிகளையும், குழந்தைகளையும் பறிகொடுத்தவர்கள் ஆவார். அவர்களுக்கும் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழ் கிடைக்கவில்லை.
ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழுக்காக சட்டப் போராட்டம் நடத்திவரும் நான்கு உறவினர்களுக்காக வழக்கறிஞர் தீர்த்தங்கர் பகத் வாதாடி வருகிறார். அவர் இதுகுறித்து கூறுகையில், ''எனது கட்சிக்காரர்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக 2 முதல் 3 முறை வரை ரத்தப் பரிசோதனை செய்தனர். ஆயினும் தீர்வு எட்டப்படவில்லை. ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கி பலியான 37 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. தற்போது மற்றொரு கொடிய ரயில் விபத்தை நாம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் யாரும் இந்த பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்வரவில்லை'' என்கிறார் அவர்.
இவ்விவாகரம் குறித்து தென்கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இறப்புச் சான்றிதழ் வழங்குவது மாநில அரசின் பணியே தவிர, ரயில்வே துறை அல்ல என்றார். சட்டப்படி, காணாமல் போன ஒரு நபரை ஏழு ஆண்டுகள் ஆகியும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் அவரை இறந்துவிட்டதாக அறிவிக்கலாம். ஆனால் 13 ஆண்டுகள் ஆகியும் கூட ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பது தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.