ஹரியானா மாநிலத்தில் உள்ள யமுனாநகர் மாவட்ட ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான அர்ஜுன் சிங்கின் மகன் பூபிந்தர் சிங் அறவழியில் போராடிய கிராம மக்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய குற்றத்திற்காக போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த மாவட்டத்தில் உள்ள MANDAULI கிராமத்தில் உள்ள குவாரியிலிருந்து மணல் மற்றும் கிரவெல் கற்களை லாரிகளில் ஏற்றி செல்வது வழக்கம்.
அந்த லாரிகள் தாமோபுரா என்ற கிராமத்தின் வழியாக லோடுகளை சுமந்தபடி கடந்து சென்றுள்ளன.
அதனால் அந்த கிராமத்திலிருந்து வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதனையடுத்து கிராம மக்கள் ஒன்று திரண்டு குவாரியை குத்தகைக்கு எடுத்த குத்தகைதாரரிடம் முறையிட்டுள்ளனர்.
அதில் லாரிகள் தங்கள் கிராமத்தின் வழியாக இல்லாமல் மாற்று பாதையில் திருப்பிவிடுமாறு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
நேற்றும் இது தொடர்பாக கிராம மக்கள் சம்மந்தப்பட்ட நபர்களை சந்தித்து முறையிட்டுள்ளனர். இருப்பினும் அதனை புறந்தள்ளிவிட்டு குவாரிகளிலிருந்து லாரிகள் தாமோபுரா கிராமத்தின் வழியாகவே சென்றுள்ளது.
அதனை கண்டு ஆவேசமடைந்த கிராம மக்கள் லாரிகளை மறித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குவாரியை குத்தகைக்கு எடுத்தவரின் கவனத்திற்கு சென்றுள்ளது. அதனையடுத்து கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்ட இடத்திற்கு ஒரு காரில் நான்கு பேர் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கையில் ஆயுதம் ஏந்தியிருந்த நிலையில் அதில் ஒரு திடீரென துப்பாக்கியை எடுத்து தர்ணாவில் ஈடுபட்ட மக்களில் ஒருவரை பார்த்து குறி வைத்துள்ளார்.
அதனை கண்டு சுதாரித்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளனர்.
போலீஸ் வருவதற்குள் அவர்கள் நால்வரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். கிராம மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் இந்த குற்றத்தில் ஈடுபட்டது முன்னாள் எம்.எல்.ஏ அர்ஜுன் சிங்கின் மகன் பூபிந்தர் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் என தெரியவந்துள்ளது.
சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.